Popular Posts

Wednesday, December 28, 2016

ஐஸ்வர்யா ஆண்கள் அழகு நிலையம்!



Image result for gents beauty parlour in chennai
ஐஸ்வர்யா ஆண்கள் அழகு நிலையம்!
ரொம்ப நாளா மனசுக்குள்ள ஒரு ஆசை! நாம் ஏன் அங்கு போய் நம்மளை நாமே சிறப்பிச்சிட்டு வரக்கூடாதுன்னு!
பர்ஸில் செலவே ஆகாம பிங்க் கலர் நோட்டு ரெண்டு சும்மா கிடந்ததிச்சு!
அதாம்லே சில்லரையே கிடைக்காத 2000 ரூவா நோட்டு!
யாரும் நம்மளை பார்க்கல’ன்னு செக் பண்ணிட்டு நைஸா ஐஸ்வர்யா அழகு நிலையத்திற்குள் நுழைஞ்சாச்சு. ரிசப்ஷன்லே ஐஸ்வர்யான்னு நினைக்கேன். நிறைய பவுடரை முகத்தில் அப்பிட்டு ஒரு வொய்ட் கரகாட்டக்காரி மாதிரி அம்மிணி உக்காந்திட்டு இருந்துச்சு.
”ப்ளிஸ்! கம் இன் சார்!” – வாட் ஏ ஸ்வீட் வாய்ஸ்!
”ம்! இது ஆண்களுக்கான அழகு நிலையம்தானே?” – கரகர குரலில் நான்.
”டெபனெட்லி! டெபனெட்லி! ப்ளீஸ் டேக் யுவர் சீட் சார்!”
-கூச்சமாக இருந்தாலும் அமர்ந்து கொண்டேன்.
சுனாமி, சென்னை மழை, வெள்ளம்,வர்தா புயல் இப்படி எத்தனையோ பார்த்தவன் நான்.
இருந்தாலும் பவுடர் போட்ட பெண்களுடன் பார்த்து பேச எப்பவுமே நடுக்கமா இருக்குது!
என்னை நானே மனசுக்குள் திட்டிகிட்டேன்.
“சார்! இதைப் பாருங்க!” – பளபள’ன்னு இருந்த ஒரு புக் ஒன்றை எடுத்து தந்தார் ஐஸ்வர்யா.
எல்லாமே இங்கிலீஸில் இருந்தது.
பேஸியல் – ரூ 1000
ப்ளீச்சிங் கம் பேசியல் – ரூ 2500
இப்படி நிறைய இருந்திச்சு. சத்தியமா புரியல.
“இதென்ன சரவணா பவன் மெனு கார்டு மாதிரி இருக்கே? “
“சார்! ஏதாவது சொன்னீங்களா?”
“நோ..நோ!”
நான் மெனு கார்டை முறைத்துப் பார்த்து கொண்டிருக்கும்போதே அந்த பவுடர் அம்மிணி, யாருக்கோ போன் செய்தது. உடனே ஒரு பெண் அழகான க்ளாஸில் ஜில் வாட்டர் கொண்டு வந்து கொடுக்க.. நானும் ஜம்பமாக வாங்கி கொஞ்சமாக குடித்து விட்டு கீழே வைத்தேன்.
“சார்! ஏதோ விசேத்திற்கு போறீங்கன்னு நினைக்கேன்!” – ஐஸ்வர்யா
‘ஐஸ்வர்யா ஏன் இங்கிலீஷில் பேசல? ஒருவேளை இங்கிலீஸ் தீர்ந்து போச்சோ..? அல்லது எனக்கு இங்கிலீஸ் தெரியல என்பது தெரிஞ்சு போச்சோ?’
“ஆமாங்க. ஒரு முக்கியமான கல்யாணத்திற்கு போகணும். மாப்பிள்ள விஐபி! அதான்.. ” –சமாளிச்சேன். டுமீல்தான்!
“அப்ப ரொம்ப நல்லதா போச்சு. பேஸியல், ப்ளிச்சீங், ஹேர் கட் , டை இப்படி அசத்திடலாம் சார்! மாஸ்டர் பேக்கேஜ் எடுத்திடுங்க! ட்வெண்டி பர்சன்ட் உங்களுக்கு ரிபேட் வாங்கித்தர்றேன். அதுக்கு அப்புறம் பாருங்க! ஒரு பத்து வருஷம் குறைஞ்ச மாதிரி லுக் வந்திடும் சார்!”
“எனக்கோ ஜஸ்ட் ஐம்பது வயசுதான் ஆச்சு! ஆனா ரிடர்ய்மெண்ட் ஆயிடுச்சான்னு பார்பர் ஷாப்’லே கேடு கெட்ட மனுசன், சம்மட்டியால் அடித்தது போல கேட்டது ஞாபகத்திற்கு வந்தது’
“மாஸ்டர் பேக்கேஜ்னா எவ்வளவு ஆகும் மேடம்?” – ஒரு நாப்பது வயது லுக் வந்தாலே போதும்! அசத்திடலாம்! ஆசை! ஆசை! அம்புட்டும் பேராசை!
“ஜஸ்ட் ஃபிப்பீடீன் தவுசண்ட் ! ட்வெண்டி பர்சண்ட் ரிபேட் போட்டுப் பார்த்தா டுவல் கே ஆகும் கேஷா? கார்டா சார்?”
‘ஆ.. பன்னெண்டு ஆயிரமா? அது என் ஒரு மாத சம்பளம்! அடியேய்.. நான் இன்னும் சரின்னு சொல்லவே இல்லை! நீ ஏதாவது பில் போட்டு தொலைச்சிராதே!”
டிவிட்டர்லே யாரோ ஹேர் ஸ்டெட்ரினிங்னு ஏதோ எழுதி இருந்தது திடீர்னு ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. விலையை கேட்டவுடன் என்னுள் இருந்த பயம், நடுக்கம் எல்லாம் மறைந்து அதுவே பீதியாக உருவெடுத்து ஆட்டம் போட ஆரம்பித்து விட்டது.
“ப்ளிச்சிங் எல்லாம் வாணாம். மூஞ்சி என்ன ரெஸ்ட் ரூமா என்ன? ..ம்! ஹேர் ஸ்டெட்ரினிங் செய்யணும்!”
ஐஸ்வர்யா பாப்பாவுக்கு சிரிப்பு வந்தே விட்டது.
“ஏம்மா? எதுக்கு சிரிக்கே?” –இதுக்கு முன்னாடி நான் அவரை மேடம்னு சொன்னதை நோட் பண்ணிக்கணும்.
“சார்! அதெல்லாம் லேடிஸ் விஷயம். உங்களுக்கு ஏனாம்?”
அப்பாடா! எனக்கு இதுதான் வேணும். ஏதாவது பேசிட்டு தப்பிச்சு வந்திடலாம்னு மனசுக்கு மாஸ்டர் ப்ளான் போட்டாச்சு.
“நோ! ஜப்பான்லே ஆண்களும் ஹேர்-ஸ்டெட்ரினிங் செய்வாங்க. ஜப்பான்-ரவி சொல்லியிருக்கார்!”
“ஓ! ஸாரி சார். தாராளமா செய்திடலாம். பைவ் தவுஸெண்ட் இருந்து டென் தவுசண்ட் வரைக்கும் ஆப்பர் இருக்கு. அப்பாய்மென்ட் பிக்ஸ் பண்ணிடறேன் சார்!”
ஒரு நோட்டை எடுத்து ஐஸ்வர்யா ஏதோ தேட..எனக்கு செம கடுப்பாயிடுச்சு.
“என்னம்மா பவ் தவுசண்ட் சொல்றே. லிசன் மை ரிக்கொயர்மெண்ட் ஃபர்ஸ்ட்!”
“ஓ! சொல்லுங்க சார்!”
-எப்படீ! நான் இங்கிலீஷ் பேச ஆரம்பிச்ச உடன் பயந்திடுச்சு போல. கம்பெனியில் எனக்கு இவ்வளவுதான் இங்கிலீஸ் வரும்னு எல்லோருக்கும் தெரியும். ஆனா ஐஸ்வர்யாவுக்கு அது தெரியாது.
“..ம்! தலைலே முன்னாடி இருக்கிற முடிகளை மட்டும் ஸ்டெட்ரினிங் பண்ணினாப் போதும். பேக் ஸைடு நான் பார்த்துகிறேன். இப்ப உங்க கொடொஷனை சொல்லுங்க!”
என் முன் மண்டையை பார்த்த ஐஸ்வர்யா “சார்! முன்னாடி முடி ரொம்ப கம்மியா இருக்கு.. அதை எதுக்கு…”
”அதுதாம்மா பிரச்னையே! அடிக்கடி கலைஞ்சு போயிடுது. லேசா காத்து வீசினாலே முன்னாடி இருக்கிற முடிகள் டிஸ்டர்ப் ஆயிடுது, வெரி சென்ஸ்ஸிட்டி ஹேர்ஸ்! ப்ளீஸ் டயாக்னைஸ் அண்ட் ப்ரிஸ்கரைப்!”
ஐஸ்வர்யா என்ன நினைத்தாரோ தெரியல. கொஞ்ச நேரம் யோசித்தாள். ஏதோ மன்ந்த்லி டார்கெட் இருக்கும் போல. எதுக்கு வந்த கிராக்கியை துரத்தனும்னு நினைச்சிருப்பாங்கன்னு ஊகித்தேன்..
“சரிங்க சார்! முன் தலை முடிகள் பொதுவா சொன்ன பேச்சு கேட்காது. ஆனா எங்க ப்யூட்டி மாஸ்டர் நிச்சயம் அதை சரி பண்ணி விடுவார். அவருக்கு சேலஞ்ச்’னா ரொம்ப பிடிக்கும். அட்வான்ஸா ஆயிரம் ரூவா கட்டிடுங்க சார்! நான் அப்பாய்மெண்ட் புக் பண்ணிட்டு போன் செய்கிறேன்”
“ஏம்மா இது உனக்கே நல்லா இருக்கா? முன் தலைலே இருக்கிறது மொத்தம் நாப்பத்து ரெண்டு முடிக. அதுக்கு இவ்வளவு சார்ஜா?”
நானே என்னை சொட்டைத்தலை என்று பறை சாற்றிய நேரம்! ஐஸ்வர்யா பிடியில் இருந்து பங்கம் வராம தப்பிச்சே ஆகணும் இல்லே!
 ”சார்! இங்க வர்றதுக்கு முன்னாடி எண்ணிட்டே வந்திட்டீங்க போலிருக்கு”
ஐஸ்வர்யா பேச்சில் சற்று மரியாதை குறைவதை கவனித்தேன்.
“எண்ணித் துணிக கர்மம்னு வள்ளுவரே சொல்லியிருக்கார்.  நீங்க ரேட்டு எவ்வளவு’ன்னு சொல்லுங்க. அப்பத்தான் நான் மேல ப்ரஸீட் பண்ண முடியும்”
நான் பதிலடி கொடுப்பதை பவுடர் அம்மிணி ஊகித்து விட்டார் போலும்.
“சார்! நீங்க இன்னொரு நாளைக்கு வாங்க. மேனேஜர் கிட்ட பேசிட்டு சொல்றேன்..”
ஆஹா! என்னை துரத்த அவரே முடிவு செய்து விட்டார்! வெற்றி! வெற்றி! வெற்றி!
“யு ஸீ! ஐ எம் எ ஃபேமஸ் டிவிட்டர்.. நான் சொன்னா நிறையப்பேர் உங்க கடைக்கு வருவாங்க!”
“ஓ! நீங்க பேமஸ் பிட்டரா? எந்த கம்பெனி சார்? எங்க அண்ணாவும் ஒரு பிட்டர்தான்!”
“பிட்டர் இல்லீம்மா.. பீட்டர்! ..ச்சே! டிவிட்டர்! பேஸ் புக் மாதிரி. நம்ம பிஎம் மோடி கூட அதில் இருக்கார்!.”
‘ஓ! அந்த குருவி படம் போட்ட பேஸ் புக்கா சார்! அங்கே போயிருக்கேன். ஒரு கருமாந்திரமும் புரியல! திரும்ப வந்திட்டேன். ஸாரி சார்!”
பாப்பா நம்மளை ட்விட்டர் ஓனர்னு நினைச்சிடுச்சு போல. டேக் அட்வான்டேஜ்’னு மனதிற்குள் ஒரு அசரீரி!
“உங்களுக்கு ஆல் தோட்ட பூபதி தெரியுமா?”
”அந்த பாட்டு செமயா இருக்கும்! உங்களுக்கும் பிடிக்குமா சார்!”
“சென்னிமலையார் தெரியுமா? அவர் ஜோக் அடிச்சா நீங்கெல்லாம் சிரிச்சிடுவீங்க!”
“அண்ணாமலை சாமிதான் எங்க குலதெய்வம். சென்னிமலை-கோயில் சாமி ஜோக் எல்லாம் அடிக்குமா சார்?”
-அட! இந்த புள்ள நம்மள வேற ஏதோன்னு நினைச்சிடுச்சு போல. அலர்ட் ஆகிட்டேன்.
“ஆளுமை தெரியுமா? ஆளுமை! சொன்னா பிச்சு போடுவார்“
“என்ன சார்! ப்யூட்டி பார்லர் நடத்தறோம். எல்லா டைப் மையும் இங்க இருக்கு! நாங்களே அதை ஓப்பன் பண்ணும் போது சில சமயம் பிச்சு போடுவோம் சார்!”
-ஆஹா! நம்மள பாப்பா கலாய்க்க ஆரம்பிச்சிடுச்சு போல! சீக்கிரம் இடத்தை காலி பண்ணிடலாம்.
“அமாஸ், நந்து இவுகளை தெரியுமா?”
”சார்! நீங்க தமாஷா பேசறீங்க!”
“நீங்க ஒரு பிரபலத்திற்கிட்ட பேசிட்டு இருக்கீங்க. சரி! பரவாயில்ல! நானே என் ட்விட்டை ஆர்டி பண்ணினா நல்லா இருக்கான்னு பாக்கேன்”
“சார்! என்னென்னமோ பேசறீங்க! ஒண்ணுமே புரியல!”
“..ம்! அதைத்தான் நாங்க ட்விட்டர்னு சொல்றோம்!”
அப்ப பார்த்து ஐஸ்வர்யாவுக்கு ஏதோ போன் வர..
 “சரி! நீங்க மானேஜர் கிட்ட பேசி கொடேஷனை ரெடி பண்ணி வைங்க! நாளைக்கு வர்றேன்!”
எஸ்கேப்! 
*******************************************************************************************
பின் குறிப்பு: உரிமையோடு சில நண்பர்களை கலாய்த்திருக்கேன். மன்னிக்க!

Saturday, December 13, 2014

அமிச்சி!

அமிச்சி!
அம்மாவின் அம்மாவை எங்களூர் வழக்கப்படி அப்படித்தான் அழைப்பார்கள்.
மகள் வயிற்று பேரன்களில் நானும் ஒருவன்! கொடுத்த வைத்த கிழவி அவள்!
எத்துணை பேரன்கள்! பேத்திகள்! அந்த காலம் அப்படி! இப்போது இருக்கும் அமிச்சிகளுக்கு ஒரு பேரன் அல்லது பேத்தியை காணுவதற்கே அல்லது பேணுவதற்கோ பெரும்பாடாய் இருக்க.. அவருக்கோ அந்த தெரு முழுவதுமே பேரன்கள் பேத்திகள் மயம்தான்! கோவையில் விளாங்குறிச்சி எனப்படும் அழகிய குக்-கிராமம். இன்று நகரச்சாயல் விழுந்து, வெளிறி தன் கிராமிய மணத்தை தொலைத்து, இயல் வனப்பை இழந்து அநாதையாகி, பரட்டையாய் இருப்பதாகவே அங்கு செல்லும்போதெல்லாம் உணர்கிறேன். பீளமேடு-அன்னூர் இணைப்புச்சாலை கிராமத்திற்குள் கோடு போட்டு அழித்துவிட்டது.
சும்மா கிடந்த விளையாத நிலங்கள்கூடகோடிகளுக்கு விலைபோய்விட்டன.
விவசாயம் பார்த்துக்கொண்டிருந்த கவுண்டர் குடும்பங்கள் வங்கிகளில் வட்டி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றன. நெசவு தவிர வேறு தொழில் அறியாத முதலியார்கள் மெல்ல மெல்ல தங்களது அடையாளங்களை இழந்துவிட்டார்கள். பாவு போட்டு நூலைப்பதம் பார்க்கும் பாவடி எனப்படும் இடம் கூட பொட்டு வைக்காத நெற்றி போல பார்க்க பார்க்க பரிதாபமாக இருந்தது. கோலிக்குண்டு, பம்பரம் என விளையாடிய தெருக்கள், சிமெண்ட் ரோடுகளாக மாறு வேஷம் போட்டுகொண்டு எதையும் சொல்ல முடியாமல் வாய் பூட்டு போட்டுக்கொண்டு மூச்சு திணறிக்கொண்டிருந்தன. சொத்துகாரன்கூட கோவணம் கட்டி வாழ்ந்த கதை போய், ஒவ்வொரு தெருக்கோடியிலும் கோடி ரூவாயில் வீட்டைக்கட்டிவிட்டு உள்ளே தனியாக வாழும் கோமாளி நகரமாக இன்று மாறிவிட்டது. ஷிப்ட் கார் இரண்டு வாங்கியுள்ளேன் என்று பெருமையாக பேசும் சிலரை பார்க்கும்போது, மகிழ்ச்சியும் வரவில்லை. பொறாமையும் வரவில்லை. இந்த வளர்ச்சி சற்று அயர்ச்சியைத்தான் தருகின்றது. கிராமத்திற்கே உரித்தான பல அடையாளங்களை இழந்து ஏதோ சேற்றில் விழுந்த கிழட்டு யானையைப்போல தோற்றம் அளிக்கிறது அந்த கிராமம்.

முதலியார் வழவு! அந்த தெருவின் முதல் வீடு எங்களுடையது!
முதலியார் வழவுக்குள்  யார் வந்தாலும் எங்கள் வீட்டை கடந்துதான் செல்ல வேண்டும். சொந்தக்காரர்கள் போகும்போதே எதற்கு வருகிறார்கள்? ஏன் வருகிறார்கள்? என்கிற தகவலை ஆத்தா (அப்பாவின் அம்மா) பெற்று விடுவார்.  அப்படியும் நழுவி விட்டால், அவர்கள் திரும்பிவரும்போது தப்பிக்க முடியாது! மடக்கி செய்திகளை கறந்துவிடுவார்!

பொடக்காலி (புழக்கடை என்பதன் வழக்குச்சொல்) என்று அழைப்பார்கள். அது என்ன? எல்லார் வீட்டிலும்தான் பொடக்காலி இருக்கிறது. நம் வீட்டை மட்டும் இப்படி அடையாளப்படுத்தியிருக்கிறார்களே? என்று கேட்டதுண்டு.
பிரமாண்டமாக இருந்த பெரிய வீடு, சொத்து பிரிவுக்கு உள்ளான போது பொடக்காலி மனையை தாத்தாவுக்கு தந்து விட்டதால், அன்றிலிருந்து அந்த வீட்டை பொடக்காலி வீடு என்று பெயர் பெற்றதாம்! கள்ளும், கறியும். வேலும், வீர வாளும் அந்த வீட்டிற்கு அந்த காலத்து அடையாளங்களாம்!
தாத்தாவிடம் நாட்டு துப்பாக்கிகூட இருந்ததாக ஆத்தா பயந்து கொண்டே கூறியள்ளார்! அது வரலாறு!

மெல்லியதான தேகம். சிவந்த நிறம். முத்துப்போன்ற அழகான உறுதியான பற்கள்! அயராத உழைப்பு! சிக்கனம்! என் அமிச்சியின் அடையாளங்கள்!
அப்புச்சியைப்பற்றி அதிக நினைவுகள் இல்லை. அவர் இறந்த போது அங்கே கூடியிருந்த கூட்டம் நிழலாக மனதில் இருக்கின்றது. அளவுக்கு மீறிய சொத்துக்கள் இருந்ததால் அவரை அடக்கம் செய்யக்கூட மகன்களுக்கு நேரமில்லை. சொத்து சண்டைகளில் பிஸியாக இருந்தார்களாம். என் அப்பாதான், முன்னின்று நல்லவழி செய்ததாக அமிச்சி சொல்லிருக்கிறார்.
பச்சை நிறத்தில் புடவை கட்டியிருந்த என் அமிச்சிக்கு வெள்ளை நிறத்தில் புடவை மாற்றி விட்டிருந்தார்கள்.
தாலியை அறுத்துவிட்டார்கள். பொட்டு அழிக்கப்பட்டிருந்தது.
அந்த அமங்கல கோலத்தில் அமிச்சியை பார்த்த போது  நான்கு வயது சிறுவனான என் மனதில் அந்த காட்சி அழுத்தமாக மனதில் பதிந்துவிட்டது.

என் வீட்டிற்கும் அமிச்சி வீட்டிற்கும் கூப்பிடு தூரம்தான்.
வீட்டில் சதா தறி ஓடிக்கொண்டிருக்கும் இரைச்சல் இருந்துகொண்டே இருக்கும். இடமும் வசதிப்படாது. ஆகவே உறங்குவதற்கு மட்டும் அமிச்சி வீட்டிற்கு ஓடி வந்து விடுவேன்.
கருப்பாயி புருஷன் என்று செல்லமாக அமிச்சி என்னை விளிக்கும்போது  ஒரு வெட்கம் கலந்த கோபம் வரும். டவுஸர் கூட சரியாக போடத்தெரியாத என்னை புருஷன் என்று அழைத்தால் கோபம் வராதா என்ன? இருந்தாலும் அமிச்சி எங்கு சென்றாலும் உடன் ஒட்டிச்செல்லும் அங்கமானேன்.
மாலை நேரங்களில் தினமும் அங்காளம்மன் கோயிலுக்கு அழைத்துச்செல்வார். அங்கு தொப்பை போட்ட ஒரு செட்டியார் ராமாயணம் படிப்பார். கம்பீரமான ராமர் படம் எனக்கு அறிமுகமானது அந்த வயதில்தான். ராமாயணத்தில் ஏதோ ஒரு பகுதியை மட்டும் படிப்பார்கள். முடித்த பின்னர் வந்தவர்களுக்கு பிரசாதமாக சிறிது மண்-சர்க்கரை தருவார்கள். அதற்காகவே அங்கு செல்லும் சிறுவர்களும் உண்டு. அமிச்சியோடு நான் கழித்த அந்த குழந்தை பருவம்  இன்றும் அந்த மண்-சர்க்கரையாய் கரைந்து இனிமையான நினைவுகளாய் தேங்கிவிட்டன.

நான் பார்த்த முதல் சினிமா எதுவென்று நினைவில்லை. ஆனால் அமிச்சியின் கரங்களை பிடித்துக்கொண்டு என் அப்பாவின் எதிர்ப்பை மீறி நான் பார்த்த “அடிமை பெண்” படம் மறக்கமுடியாது.
காளப்பட்டியில்தான் டெண்ட் கொட்டகை. வீட்டிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரமிருக்கும்.
தமிழக அரசின் பரிசு பெற்ற படம் என்று ஒற்றை மாடு பூட்டிய கூண்டு வண்டியில் துண்டு பிரசுரம் வீசிச்சென்றார்கள். அதுதான் அந்த காலத்து விளம்பரம்!  குனிந்த உருவமாக எம்ஜிஆர் பட போஸ்டர்!
அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று என் மனதிற்குள் கொழுந்துவிட்டு எரிந்தது ஆசை.
சைக்கிளில் அப்பா வந்து கொண்டிருந்தார். ஆசையுடன் ஓடிச்சென்று ‘அப்பா! இந்த படம் அரசு பரிசு பெற்ற படமாம்! பார்க்கணும். காசு தாங்க!’-என்று கேட்டேன். அதற்கு முன்னர் சினிமாவுக்காக அப்பாவை இம்சித்ததில்லை. ஆகவே அவர் ‘சரி! போய் வா!” என்று சொல்வார் என்றுதான் எதிர்பார்த்தேன்.
அப்பா அந்த சமயத்தில் காங்கிரஸ் அபிமானி என்று எனக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான். ”ஒழுங்கா போய்ப்படி!”-என்று மறுத்துவிட்டார். அடக்க முடியாத கண்ணீரோடு என் அமிச்சி வீட்டிற்கு அழுது கொண்டே போனேன்.
நடந்த விஷயங்களை கேட்டு அறிந்து கொண்ட அமிச்சி, “அவன் கிடக்கிறான். நான் உன்னை கூட்டிட்டுபோறேன்” -என்று ஆறுதலாக சொன்னார்.
சிறு வயது என்றாலும் எதையும் நான் அமிச்சியிடம் கேட்டுப்பெற்றதில்லை.
ஏதாவது திண்பண்டங்களை கொடுத்தால்கூட ஏற்க மறுத்து விடுவேன்.
பேரனகளில் நான் ஒருத்தன் தான் அப்படி ரோஷம் காட்டுவேன்.
மணக்க மணக்க வடை சுட்டு வைத்திருப்பார். எனக்கு இணையான பிற பேரன் பேத்திகளுக்கு தருவார். எனக்கும் தருவார். நான் மட்டும் மறுத்துவிடுவேன்.
கருப்பாயி புருஷனுக்கு ரோஷம் ஜாஸ்தி-என்று திட்டுவார்.
அப்படிப்பட்ட நான் அழுதுகொண்டு அந்த சினிமாவை பார்க்க வேண்டுமென்று கேட்ட போதே அவர் முடிவு செய்துவிட்டார் போலும்.
அன்றே நான் என் அமிச்சியின் விரல்களை பிடித்துக்கொண்டு காளப்பட்டி டெண்ட் தியேட்டரை நோக்கி கம்பீரமாக நடந்த அந்த நாள் இன்று பசுமையாக உள்ளது.
அப்படி நாங்கள் போய்க்கொண்டிருந்தபோது அப்பா கவனித்துவிட்டார். பயந்துகொண்டே அமிச்சியின் கரங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டேன்.
அமிச்சி, அப்பாவுக்கு அக்கா முறை.
ஆகவே அப்பா அவரை எதிர்த்து எதுவும் பேசமாட்டார் என்பதெல்லாம் அந்த வயதில் தெரியவில்லை. அப்பா என்னை முறைத்து பார்த்துக்கொண்டே போய்விட்டார். அமிச்சி என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே முதுகை தட்டிக்கொடுத்த அந்த நிகழ்வு அப்படியே மனதில் தங்கிவிட்டது. அரசு பரிசு பெற்ற அடிமைப்பெண் படத்தை ரசித்துப்பார்த்தேன். ”தாயில்லாமல் நானில்லை!”- இந்த பாட்டை இன்றும் ரசித்துப்பார்க்கிறேன்.
அப்படத்தின் மாண்பு, சிறப்புக்களை பின்பு அப்பாவிடம் நான் விவரித்த போது ‘நான் வேண்டாம் என்று சொல்லியும் போய்விட்டு வந்தவன்தானே?,- என்று அப்பா கோபப்பட்டதும், அந்த குற்ற உணர்ச்சிகளுடன் பல நாட்கள் அவரை நான் பார்க்க தயங்கிய நினைவுகள் பசுமரத்து ஆணி போல இன்றும் என் மனதிற்குள் உலா வருகின்றன.

இரவு நேரங்களில் உறங்குவதற்குமுன் தினமும் ஒரு கதை சொல்லும் என் அமிச்சி!
சொத்து சேர்த்து அதை அனுபவிக்காமல் பரிதாபமாக செத்த ஒரு கஞ்சன் கதையை அடிக்கடி கேட்டு ரசிப்பேன்.
யாருக்கும் உதவாத அந்த கஞ்சன் மேல் இன்றும் கோபம் வரும்.
தேங்காய் திருட அந்த கஞ்சன் மரமேறி இறங்கத்தெரியாமல் திணறுகிறான்.
காப்பாற்ற வந்தவன், நான் உன்னை காப்பாற்றினால் எவ்வளவு தருவாய்? எனத்திரும்ப திரும்ப கேட்டு அந்த கஞ்சனை கடுப்பேத்துகிறான்.
மரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்த அந்த கஞ்சன், இரண்டு கைகளையும் விரித்து நான் இவ்வளவு தருவேன் என்று சொல்ல கீழே விழுந்து செத்து விடுகிறான். இந்த கதைதான் பயங்கர சிரிப்பை தரும் எனக்கு.
மரத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ளாமல், இரண்டு கைகளையும் விரித்து, என்னை காப்பாற்றினால், இவ்வளவு தருவேன்! என்று அந்த கஞ்சன் சொன்னதை அமிச்சி, தன் கைகளை விரித்துக்காட்டி அபிநயத்தோடு சொல்லும்போது நான் விழுந்து விழுந்து சிரிப்பேன்.

மகன் வயிற்று பேத்திகளில் ஒன்றை காட்டி, நீ பெரிதான பின்னர், இவளைத்தான் கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஏன் சொன்னார் என்று இன்றும் புரியவில்லை.

அமிச்சி தவறிய போது என்னால் செல்ல முடியவில்லை.
அந்த இழப்பை என் மனம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அந்த இறுதிக்கிரியைகளை என் நினைவுகளில் ஏற்றிக்கொள்ள விருப்பமில்லை.
அவர் காற்றோடு கலந்து விட்டதாக எண்ணிக்கொள்கிறேன்.

நல்ல மூப்படைந்த வயதிலும் ஒரு பல்லும் விழாத அந்த முத்து பல்லழகி அமிச்சி என் இதயத்தில் அழுத்தமாக, ஆழமாக பதிந்துவிட்டார்!

அந்த கிராமத்திற்கு செல்லும்போதெல்லாம் அமிச்சியின் நினைவுகள் உயிர்த்தெழுந்து ஓடிவந்து என் கரங்களைப்பற்றிக்கொள்கின்றன!

அன்புடன் திருநாவு
டிசம்பர், 2014






Sunday, December 7, 2014

”விபரீத நாடகம்”


அது ஒரு கனாக்காலம்!

(உண்மைக்கதை)


விளையாட்டு வினையாகிவிடும் என்று பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்! அப்படி ஒரு விளையாட்டு வினையாகப்போனதுதான் எனது மேடை நாடக அனுபவம்! நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன்.
அவர் தொலைபேசியில் பிஸியாக இருந்தார்! சரி! பேசி முடியட்டும் என்று காத்திருந்தேன்.
அதாவது நாகரீகமில்லாமல் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன்!
ஏதோ எங்கள் அலுவலக ஆண்டு விழாவில் ஒரு நாடகப்போட்டியாம்! இது வருடாவருடம் நடக்கும் வழக்கமான நிகழ்ச்சிதான்! பரிசு மற்றும் பல சலுகைகள் கிடைக்கும்!
சின்ன சின்ன நாடகங்களில் நடிப்பது என் நண்பருக்கு ஒரு பொழுதுபோக்கு. அந்த வருட நாடகத்தில் அவருக்கு ஒரு நல்ல வேஷம் வேண்டும்! அது சம்பந்தமாகத்தான் போனில் பிஸியாக இருக்கிறார் என்பது நான் ஒட்டு கேட்டதில் புரிந்தது. எங்கள் வளாகத்தில் பல பிரபல நாடக வல்லுனர்கள் உள்ளனர்!
கலைக்கு ஏது எல்லை? தெலுங்கு நாடக சபா! மலையாள நாடக சபா! பெங்காளி நாடக சபா! ஹிந்தி நாடக சபா! இப்படி பல சபாக்கள் இந்த நாடகப்போட்டியில் உற்சாகத்தோடு  பங்குகொள்ளும். ஆகவே,
ஏதாவது ஒரு நாடகத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டுமென தொலைபேசியில் எங்கள் பேட்டை பிஸ்தாக்களான டைரக்டர்களிடம், என் நண்பர் கெஞ்சிக்கொண்டிருந்தார்! அவரைப்பார்த்தால் பாவமாக இருந்தது.
நான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம்!
“என்னய்யா? இதுக்கு போய் கெஞ்சிட்டிருக்கே? நீ ஒரு பிரமாதமான நடிகனாச்சே! உன்னை தேடிட்டு வருவாங்க! நீயாகவே போய் வாய்ப்பு கேட்பது நல்லாவா இருக்கு?” – என்றேன்.
இவன் நக்கலாக சொல்கிறான் என்றே எண்ணிய நண்பர் கொஞ்சம் முறைத்தபடியே,
“நீ வெறும் வாய்ச்சவடால்தான்! கவிதங்கிற! கதைங்கிற! ஒலக எலக்கியம்ங்கிற! பாலா அப்படியாக்கும் பாலசந்தர் இப்படியாக்கும்னு வெத்து பேச்சு வேற! எல்லாம் வெட்டிப்பேச்சுதான்! முடிஞ்சா நீ ஒரு நாடகம் எழுதிப்போடு! நான் நடிக்கிறேன்!” –சவால் விடற மாதிரி சொல்லிட்டார்.
நான் கொஞ்சம் சவடால் பார்ட்டிதான்! பொடிக்கதைகள் சிலவற்றை எழுதி நானே படித்துப்பார்த்துவிட்டு குப்பைத்தொட்டியில் போடும் அளவுக்கு எனக்கு எழுத்து ஞானம் இருந்தது உண்மைதான்! எனக்கு ரோஷம் வருகிற மாதிரி அவர் பேசியது பிடிக்கவேயில்லை. எனக்கு சாதாரணமாவே தன்மானம் அதிகம்!
ஒரு எறும்பு என்னைக்கடிச்சாலே அதை தேடிப்பிடிச்சு திருப்பி கடிச்சாத்தான் எனக்கு தூக்கமே வரும்!
அப்படிப்பட்ட என்னை பார்த்து எப்படி கேட்டுட்டார் இந்த நண்பர்?
“நாடகம் எழுதணும்! அவ்வளவுதானே! நாளைக்கே எழுதிட்டு வர்ரேன்! நீ நடிக்கிற! உன் நண்பர்களிடம் சொல்லி தயாராக்கி வை! இது மாமியார் நாகம்மா மேல சத்தியம்!” – உணர்ச்சிகள் பொங்க வார்த்தைகளை கொட்டிட்டேன்.
“நீ மொதல்லே எழுதிட்டு வா! அப்புறம் பார்க்கிறேன்!“ 
என்னை அவர் நம்பல! என்னை அவர் நம்பல போல!
அடேய்! இதோ வரேன்டான்னு சொல்லிட்டி கிளம்பி வீட்டுக்கு வந்தாச்சு! நாடகம் எழுதறதென்ன கம்ப சூத்திரமா? கொஞ்ச வசனங்களை பிச்சுபிச்சு கதைக்குள்ளே தூவினா நாடகமாயிடும்! ராத்திரி பூராவும் ரோசனைதான்! தூக்கமே வரல! நாடகத்துக்கான கதையே கிடைக்கல! என்ன ரொம்ப யோசனையா இருக்கீங்க? –என்று கேட்ட ஊட்டம்மாவுக்கெல்லாம் பதில் சொல்லல. சொன்னால் எல்லாம் கெட்டுப்போயிடும்னு தெரியாதா எனக்கு! நாடகத்தில் பெண் கேரக்ட்டர் வரக்கூடாது. ஏனென்றால் ஆர்டிஸ்ட் கெடைக்க மாட்டாங்க! அப்படியே கெடைச்சாலும் நம்ம வூட்டம்மா, வீட்டை பூட்டிட்டு அவங்க ஆயா வீட்டுக்கு போய்டுவாங்க. அதனாலே, எந்தவித பெண் கேரக்ட்டரும் வராம யோசிச்சு, யோசிச்சு கடைசியா ஒரு கதை செட்டாச்சு! அது ஒரு டுபாக்கூர்  கதை என்பது இப்ப தெரியுது! ஆனா அப்பெல்லாம் அந்த கதை ஆஸ்கார் வரைக்கும் போய் அவார்டுகளை அள்ளிட்டு வரும்னு நினைச்சிட்டுருந்தேன். அடுத்த நாளே நண்பரைப்பார்த்து நாடக ஸ்கிரிப்ட்டை தூக்கி அவர் முன்னாலே போட்டேன்.
இதுதான் நாடகம்! புடி! பிடிச்சா நடி! நாலு கேரக்ட்டர்கள்தான்! ஈஸியா ஆர்டிஸ்களை செட் பண்ணிடலாம்!
ட்ராமா-போட்டிக்கு எண்ட்ரி பணத்தை நான் கட்டிடறேன்!
/* நானே எனக்கு வைச்ச பில்லி-சூனியமென்பது பிற்காலத்தில் புரிந்தது! */
”நாடக செலவுக்கு நான்! நடிப்புக்கு நீ!”
-என்னை பற்றி ஓரளவு என் நண்பருக்கு தெரியும்.
நாடக ஸ்கிரிப்ட்டை படிச்சுப்பார்த்தார்.
அட! ஒரே நாளில் எழுதிட்டானே! என்ன நினைச்சாரோ தெரியல!
”நல்லாத்தான் இருக்கு! போட்டுடுவோம்!” – இதை கேட்றப்போ, அப்படியே என் உச்சி மண்டையிலே கிர்கிர்ர்ர்…..தான்!
“சரி! நம்ம நாடக குழுக்கு ஒரு பேர் வைச்சு, நாடகத்திற்கும் ஒரு பேரை வச்சு, நீ எண்ட்ரீ பீஸ் கட்டிடு!
நம்ம நண்பர்கள் சொல்லி நடிக்க ரெடி பண்ணுவது என் பொறுப்பு! அடுத்த வாரமே ரிகர்சல் ஆரம்பிச்சிடலாம்!”
-நண்பர் செம குஷியாகிட்டார்! நான் சொல்லாமலே முக்கியமான ரோலை அவர் எடுத்திகிட்ட சந்தோஷமோ என்னமோ!
-இப்படிப்பட்ட ஒரு விபத்தை அல்லது வரவேற்பை நான் எதிர்பார்க்கல! நாடக ஸ்கிரிப்ட் அப்படி! அப்படியே பாலசந்தர், பாலா ரேஞ்சுக்கு மனது எகிற ஆரம்பிச்சுது! நாடக வரலாற்றிலே முதல் முறையாக
”SMART ARTS”
வழங்கும் நாடகம்!
“ஜனதா மார்கெட்”  - /* இதுதான் நாடக தலைப்பு! துப்பாதீங்க! */
கதை, வசனம், டைரக்‌ஷன்
இதெல்லாம் யாரு? சாட்சாத் நானேதான்!” 
/* அப்புறமா துப்பிக்கலாம்! ஏன்னா இன்னும் நாடகமே ஆரம்பிக்கல பாருங்க! */
-இப்படி போஸ்டர் அடிச்சு பட்டி தொட்டியெல்லாம் ஒட்டியாச்சு!
எண்ட்ரீ ஃபீஸ் கட்டியபின்னர் போஸ்டர் செலவு!
பின்ன சனி தனியாகவா போகும்?
இப்ப மேட்டர் ஜனங்களுக்கு தெரிஞ்சு போச்சு! இவன் யாரடா? புதிசா வந்த சங்கரதாஸ்? ஃப்ரண்ட்ஸ்க எல்லாம் வாழ்த்தினாங்க! என் பேரைச்சொல்லி, ரொம்ப பாராட்டி….. ”நல்ல முயற்சி! உங்களுக்குள்ள ஒரு கலைப்புலி தூங்கிட்டு இருந்திச்சு! அது எந்திரிச்சாச்சு! இனி நாடக மேடை ரண களம்தான்!” தெலுங்கு நாடக சபா தெக்கே ஓடப்பாக்குது! மலையாள நாடக சபா மல்லாக்க படுக்கப்போவுது! உங்க நாடகத்திற்குத்தான் முதல் பரிசு கிடைக்கும்!” – எப்படியெல்லாம் உசுப்பேத்தினாங்க தெரியுமா?!
அது ஒரு கனாக்காலம்!
அது சரி! நாடகத்தோட சாராம்சம் இன்னான்னு கேட்க மாட்டீங்களா? கேட்டுட்டு சிரிக்கக்கூடாது! நான் இந்த கதையை சொல்லும்போதே, என் பொண்ணு ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சா! அதே மாதிரி நீங்களும் சிரிக்கக்கூடாது! அப்படி நீங்க சிரிப்பீங்கனு உங்களுக்கே தெரிஞ்சா இப்பவே முடிச்சுக்கலாம் டாட்!
நீங்க சிரிக்க மாட்டீங்க! ஏன்னா கதை அப்படி! கதை சொல்லப்போறேன்! கண்ணை மூடிட்டு கேட்கணும்!
ஒரு பயங்கரமான காடு! கும்மிருட்டு! காலில்லாத ஒரு பெண்! ரொம்ப அழகு! ஆனா ஒரே கண்!
-இப்படி ஆரம்பிப்பேன்னு ஏமாந்து போகாதீங்க!
ரொம்ப சாதாரணமா, சந்தோஷமா ஆரம்பிக்கும் நாடகம் இது!
”ஒரு பிஸியான மார்கெட்! கந்தசாமி டீக்கடை!  /* ஒரு கேரக்ட்டர் வந்தாச்சா! */
பக்கத்திலே ஒரு பாய் கடை! குப்புற படுத்து கொட்டாவி விட்டுட்டு தூங்கி வழியற பாய் கடை இல்லை!
மொபைல் வியாபாரி தாபீக் பாய் கடை! /* ரெண்டாவது கேரக்ட்டர்! */
டீக்கடை பக்கத்திலே ஒரு குப்பைத்தொட்டி!
அங்கதான் குந்திக்குனு கீறார் நம்ம மூணாவது கேரக்ட்டர் கதாநாயகன் பீட்டர்!
பீட்டர் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர்! /* உங்களை மாதிரியானு முனகக்கூடாது! ..ச்சுப்! */
கந்தசாமி, தாபீக் பாய் தருகிற உணவுகளை சாப்பிட்டுவிட்டு, குப்பைத்தொட்டியே கதியாய் கெடப்பார் பீட்டர்!
பீட்டர் பொதுவா பேசவே மாட்டார்! ஏதாவது யோசிச்சிட்டு சிரிச்சிட்டே இருப்பார்.
நம்ம பாரத நாட்டிலே பிரதானமா இருக்கிற மூணு மதங்களை சார்ந்து, ஒட்டி கதை நவுருது பார்த்தீங்களா!
எப்படி பிளாட்டு?!
ஒற்றுமையா சந்தோஷமா, கலகலப்பா மார்க்கெட் ஓடுது!
இப்படி இருக்கையிலே நம்ம நாலாவது கேரக்ட்டர் வர்றார்!
அவர் கந்தசாமி கடையிலே கணக்கு வச்சு டீ குடிக்கிற பார்ட்டி! ஆனா காசு தர மாட்டான்!
கந்தசாமியை மெரட்டி மெர்சலாக்கி டீ குடிப்பதே அவன் வேலை!
பாய் கடையிலே மொபைலை ஆட்டையைப்போடும் போது, கையும் களவுமா மாட்டி செம-மாத்து வாங்கிறார் அந்த படவா துக்கிரி! கந்தசாமிதான் செமையா வெளுத்தார்! கொஞ்சம் காமெடி வேற! 
இப்படியாக ஒரு பத்து நிமிஷம் நாடகம் போகும்! அடுத்து வருது பாருங்க ஒரு ட்விஸ்டு!
அப்படியே ட்ராக் மாறும்! பக்கத்து தெருவிலே சண்டை! சாதாரண சண்டையில்லை! கவர்மெண்ட் 144 போடற அளவுக்கு பெரிய சண்டை! துப்பாக்கி சூடு வேற! மத கலவரம்!
இதுதான் சாக்குன்னு, நம்ம துக்கிரி பய, கந்தசாமியை போட்டு தள்ளிடரான்! கடன் ரொம்ப அதிகமாய்டுச்சாம்!
/* இதுதான் அந்த கொலைக்கு நான் கொடுத்த லாஜிக்! லாஜிக்லே இடி விழ! */
கொலைப்பழி பாய் தாபீக் மேலே போட்டாச்சு! துக்கிரி சாமார்த்தியமா தப்பிச்சிட்டான்!
கலவரம் கண்ட்ரோல் ஆயாச்சு! நம்ம கேமரா மார்க்கெட் பக்கம் திரும்புது! மார்க்கெட் ரணகளமா கெடக்கு!
கந்தசாமி கடை, பாய் தாபீக் கடை எரிஞ்சு கெடக்கு!
“..டொய்ய்ய்ய்ய்ய்……..” – பேக் கிரவுண்ட்லே சத்தமா காதை பிளக்கிற மாதிரி ஒரு சோக கீதம்!
இப்ப நம்ம கேமரா அதாவது போகஸ் லைட் குப்பைத்தொட்டி பக்கம் திரும்புது!
குப்பைத்தொட்டி அப்படியே இருக்கு! மெல்லமா பீட்டர் எழுந்து நிற்கிறார்!
மார்க்கெட்டை ஒரு லுக் விடறார்!
கலவர சமயத்திலே அவர் எங்க இருந்தார்? இப்படி ’குண்டக்கமண்டக்க’ கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது!
நீங்களா டைரக்டர்?
சரி! க்ளைமாக்ஸ்க்கு வாங்க!
பீட்டருக்கு பசிக்குது! கந்தசாமி அண்ணன் இல்லை! தாபீக் பாய் இல்லை!
ஆனா பீட்டருக்கு பசிக்குதே!
“..டொய்ய்ய்ய்ய்ய்……..” – பேக் கிரவுண்ட்லே சத்தமா காதை பிளக்கிற மாதிரி அதே சோக கீதம்!
இன்னும் கொஞ்சம் சத்தமா! அந்த சமயம் பார்த்து துக்கிரி பய வர்றான் அந்தப்பக்கம்!
பீட்டரைப்பார்த்து நக்கலா சிரிப்பு வேற! பீட்டருக்கு இப்பத்தான் புரியுது.
இதற்கெல்லாம் காரணம் இந்த துக்கிரிதான்! நம்ம பாலா படத்திலே, பிதாமகன் விக்ரம் மாதிரியே, பாய்ஞ்சு….
அந்த துக்கிரிப்பயல தாக்கி, கொன்னுட்டு…. பீட்டர் அப்படியே கெளம்பிறார்!
 “எங்கே செல்லும் இந்த பாதை! “-இந்த பாட்டு பின்னே ஒலிக்க நாடகம் முடிவுக்கு வருது!
பீட்டரும், துக்கிரியும் நடிப்பிலே தூள் கிளப்பிட்டதாக ஜனங்க சொன்னாங்க!
/* மெண்டலாக நடித்த பீட்டரைக் கேட்டா, ”நான் எப்பவுமே அப்படித்தான் சார்!” – அப்படீங்கிறார்! */
-கதை சொல்லி முடிச்சாச்சு!
அங்கென்ன கசகச’ன்னு சத்தம்?
இதெல்லாம் ஒரு நாடகமான்னு கேட்கக்கூடாதுன்னு ஆரம்பித்திலேயே கன்டிஷன் போட்டது மறந்து போச்சா?
இந்த நாடகத்தை ரிகர்சல் பண்ணி நம்பிக்கையோட அரங்கேற்றம் செய்கிற அடுத்த கட்டமும் வந்தாச்சு!
மேடையிலே மார்க்கெட் செட் போடணுமே?
எங்க ஊர் லோகல் செட் ஆர்டிஸ்ட்டை பிடிச்சு கிட்டத்தட்ட மூவாயிரம் செலவு செய்து ஸ்டேஜ் போட்டேன்.
மார்க்கெட் செட்டிங்!
கந்தசாமி டீக்கடை! ஒரு மொபைல் கடை! ஒரு குப்பைத்தொட்டி!
டி.ராஜேந்தரே பிரமிச்சு போறமாதிரி செமையா இருந்துச்சு!
கண்டபடி செலவு செய்யரானே? –இப்படி வூட்டுக்காரம்மா நேரடியா திட்டல.
ஒருவேளை திட்டியிருந்தாலும் எனக்கிருந்த (கொ)கலை ஆர்வத்திலே காதுலே ஏறியிருக்காது.
தேவைப்படுகிற எல்லா பேக்-கிரண்ட் மூயுசிக்கெல்லாம் ரெக்கார்டு பண்ணிட்டேன்.
அந்த காலத்திலே இப்ப இருக்கிற வசதியெல்லாம் கிடையாது.
சுத்தற டேப்பிலே தான் ஆடியோ ரெக்கார்ட் பண்ணி ஓட வைக்கணும்.
தேச ஒற்றுமையை காட்டும்விதமா ஒரு விநாயகர் பாட்டு, அல்லா பாட்டு அப்புறம் ஏசு பாட்டு!
கலவர சீனுக்கு ஆடியோ கிடைக்கிறதுதான் ரொம்ப கஷ்டமா இருந்திச்சு!
கலவர சீன் யதார்த்தமா இருக்கணுமென்பதற்காக, என் பொண்ணு உதவியை நாடினேன்!
அதாவது கலவர சீன் வரும்போது, என் மகள் தன் சக ரவுடிகளுடன் ஸ்டேஜ் ஏறி, கந்தசாமி டீக்கடையில் நான் காசு கொடுத்து வாங்கி அடுக்கி வச்ச, சாக்லேட், பிஸ்கெட் பாக்கெட்டுகளை எடுத்திட்டு ஓடி வந்துடனும்!
இந்த ஐடியா என் மகளுக்கு ரொம்ப பிடித்தது.
நாடகம் பார்க்கும்போது சாப்பிட்டு கொண்டே பார்ப்பார்கள் சிலர்!
ஆனால் இங்க கதையே வேறு!
நாடகக்காரனே சாப்பிட கொடுக்கிறானே!
சாக்லெட், பிஸ்கெட் பேரெல்லாம் எழுதி லிஸ்ட்டே கொடுத்திட்டாள்.
ரொம்ப பெரிய லிஸ்ட் அது! நிறைய ஃப்ரெண்ட்க வருவாங்களாம்!
நாடகம் பார்க்க கூட்டம் வரணுமேன்ட்டு நானும் ஒத்துகிட்டு எல்லாம் வாங்கி வச்சேன்.
எப்படியோ எல்லாம் ரெடியாக்கிட்டேன்!
அது ஒரு தனி செலவு!
அது ஒரு கனாக்காலம்!
நாடகமும் அந்த நல்ல நாளில் ஆரம்பிச்சுது! நல்ல கூட்டம்!
முதல் பிரசவம் அன்னைக்கு மண்டையைப்பிச்சிட்டு ஹாஸ்பிடல் வாரண்டாவிலே சுத்திட்டு இருக்கிற பாசமான புருஷன் மாதிரி ஒரு மோசமான ஃபீலிங்கா நான் இருந்தேன்.
வரும்! ஆனா வராது! – மனசுக்குள்ளே பட்சி கத்திட்டே இருந்தது.
கலவர சீன் வர்ற வரைக்கும் நல்லாத்தான் போய்ட்டு இருந்திச்சு!
கலவர சீன்லதான் நிஜமாவே கலவரம் ஆய்டுச்சு!
கலவர சீன் வரும்போது, லைட்டை டிம்மாக்கி, கலர்கலரா ஃபிளாஸ் தரனும்ன்னு ஒளி அமைப்பாளரிடம் சொல்லி வச்சிருந்தேன்!
நாடகம் போற அழகைப்பார்த்து, அந்த நேரம் அவர் பாத்-ரூம் பக்கம் போய்ட்டார்!
”டூ தவுசண்ட் வாட்” வெளக்கு பப்பரக்கா’னு எரிஞ்சிட்டு இருக்கு!
கலவர சீன் ஆரம்பிச்சாச்சு!
லைட் ஆஃப் ஆகல! கலர் ஃபிளாஸ் வரல!
கட்’ சொல்றதுக்கு இதென்ன சினிமாவா?
சமாளிக்கணுமே!
ஃகரீட்டா சொன்ன மாதிரி என் பொண்ணு ரவுடிகளோட வந்து கந்தசாமி கடையை துவம்சம் பண்ணிட்டாள்!
குறிப்பா சாக்லேட் பாக்ஸை குறி வச்சு வயலென்ஸ் பண்ணிடுச்சு அந்த குரூப்பு!
இப்ப கந்தசாமியை கொலை பண்ணணும்!
அவரா நடியோ நடின்னு நடிச்சிட்டு இருக்கார்!
துக்கிரி கொல்ல ட்ரை பண்ணிட்டு இருக்கார்!
மார்லே குத்தியாச்சு! ரத்தமே வரல!
மேட்டர் இன்னான்னா….
ஒரு குண்டாவிலே, குங்கமத்தை கரைச்சு வச்சிருந்தேன்.
அதை எடுத்து, கலவர கும்பல்லே யாரவது போய் கந்தசாமி மார்லே அதை ஊத்தணும்!
அந்த குண்டாவைக்காணல!
அவசர அவசரமா கொஞ்சம் குங்குமத்தை எடுத்து நானே ஓடிப்போய் அவர் மார்லே போட்டு சமாளிச்சேன். 
என் பொண்ணு அவ ஃப்ரெண்ட்ஸெல்லாம் சாக்லேட் திருடிட்டு இருந்தத ஜனங்க பார்த்திட்டாங்க!
நாடகம் பார்க்க வந்த கூட்டத்திற்கு இந்த சொதப்பல்ஸ் புரிஞ்சு போச்சு!
அதான் ”டூ தவுசண்ட் வாட் பல்ப்” பப்பரக்கானு எரிஞ்சிட்டு இருக்கே!
என் பேரச்சொல்லியும், என் பொண்ணு பேரச்சொல்லியும் ஆடியன்ஸ் ஒரே கூச்சல்!
சீரியஸ்ஸா போக வேண்டிய கலவர-சீன் காமெடியா போய்டுச்சு!
இருந்தாலும் அம்புட்டு மோசமா போகல!
க்ளைமேக்ஸ் சீன்லே பீட்டர் தன் நடிப்பால அதை சமாளிச்சு சோகத்தை வரவழைச்சிட்டார்!
பிதாமகன் விக்ரம் மாதிரியே பர்பாமென்ஸ் கொடுத்தார்!
எங்கே போகும் இந்த பாதை! – ஒரு வழியா கிளைமாக்ஸ் முடிய… எண்ட் கார்டும் போட்டாச்சு!
அப்பத்தான் லைட்-மேன் ஒன் மேட்டரை முடிச்சிட்டு வந்தாரு!
அட! நாடகம் முடிஞ்சாச்சா’னு அப்பாவியா கேட்க..
சக நடிகர் அவரை அடிக்கவே போய்ட்டார்.
“நீ சதி பண்ணி நாடகத்தை கவுத்திட்டே’-னு அவர் மீது பழியைப்போட...
ஒரே ரணகளம்தான்!
இப்படியாக நான் போட்ட நாடகம் சண்டையிலே முடிந்தது!
அடுத்த வருஷ போட்டியில் கலந்த கொள்ள முடியல!
”டாடி! அடுத்த ட்ராமா எப்ப போடப்போறீங்க? ஃபிரெண்ட்ஸ்க ரெடியா இருக்காங்க!” – தன் பங்குக்கு மகளின் கலாய்ப்பு!
ஆனா…
இன்னும் தெலுங்கு நாடக சபா, மலையாள நாடக சபா ஆளுகளுக்கு என்னைப்பார்த்தா ஒரு டர்ர்ர்ர்’தான்!
ஏனென்றால்……
எனக்குள்ளே ஒரு ”கலைப்பன்னி”  களைப்பா தூங்கிட்டு இருப்பது அவங்களுக்குத்தானே தெரியும்!
-அன்புடன் திருநாவு

(இந்த கூத்து நடந்த வருடம் ஜனவரி - 2006)