Popular Posts

Thursday, March 21, 2013

விபரீத-விமர்சன பித்தர்கள்!




தாய் கை தட்டி..முன் நிற்க..
குழந்தை தட்டுத்தடுமாறி நடக்க முயற்சிக்கும்!
குழந்தை புன்னகையுடன் விழும்! எழும்
நடக்கப்பழகும்! நடக்கும்!

கலைஞர்களும் குழந்தைகளைப்போலத்தான்!
அவன் கவிஞனாக இருக்கட்டும்!
எழுத்தாளனாக இருக்கட்டும்!
சங்கீத சக்ர்வர்த்தியாகட்டும்!
நாட்டிய ஒளியாகட்டும்! கலை ஞானியாகட்டு!ம்
அவர்களும் மழலைக் குழந்தைகள் போலத்தான்!

கைதட்டல்களின் ஓசைதான் அவர்களுக்கு உண்மையான ஊக்குவிப்பும் அங்கீகாரமும்!
அந்தத்தாயின் கைதட்டைப்போல!

இப்போதெல்லாம் புற்றீசல்களாய் புறப்பட்டிருக்கிறார்கள் விமர்சகர்கள்!
சிறார்கள், கல்லடித்து மாங்காய்கள் கவர்வதைப்போல..
சொல்லால் அடிப்போம்! –என்று கிளம்பியிருக்கிறார்கள்!
குறிப்பாக சினிமா விமர்சகர்கள்!

ஒரு தயாரிப்பாளன், வீடு, காடு, கட்டிய-தாலி உட்பட அனைத்தையும் அடமானம் வைத்து..
மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கி.. பல்வேறு இன்னல்கள் பட்டு ஒரு படம் எடுப்பார்!

அந்தப்படத்தில் பல துறைகளிலும் கலைஞர்களின் பங்களிப்பு இருக்கும்!
ஒரு சீன் மட்டும் வரும் கலைஞர்களும் அதில் பலர் இருப்பார்கள்!
அந்தப்படத்திற்கு  என்ன மாதிரி வரவேற்பு இருக்கும்? என்று ஆயிரக்கணக்கான கலைஞர்கள் ஆவலுடன் காத்திருப்பர்!
பணம் போட்டவனின் படபடப்புக்கு சற்றும் குறைந்தது அல்ல.. இந்த கலைஞர்களின் படபடப்பும், ஆர்வமும், ஆவலும்!

சினிமா விமர்சகரும் தயாராக இருப்பார்!
வரட்டும், வகையாய் கிழிக்கலாம் என்று..
அவருக்கு டிக்கெட் ஃப்ரீயாக கிடைக்குமா? என்றெல்லாம் தெரியாது!
ஆனால்,விமர்சனங்களில் ,ஃபிரீ அட்வைஸ் மிதக்கும்!
முதல் நாளின் முதல் காட்சியை விமர்சகர் பார்த்துவிடுவார்!

மாத இதழ், வார இதழ், நாளிதழ்..என்று பல பத்திரிக்கைகள்!

இந்த விமர்சகர்களுக்கு சினிமாவைப்பற்றி ஏதாவது தெரியுமா? என்பதைப்பற்றி யாருக்கும்  கவலையில்லை!
விமர்சனம் சுவாரசியமாக இருக்க வேண்டு!ம்!
படிப்பவனுக்கு அரிப்பை கிளப்பி, சொறிந்து விடுமாறு யார் எழுதுகிறார்களோ..அவர்களே.. நல்ல விமர்சகர்கள்!
கேட்டால் விமர்சன சுதந்திரம்! தர்மம்! அய்ந்தாவது தூண், யாரும் உடைக்க முடியாத தூண்! கடலை, புண்ணாக்கு என்பது போன்ற அளப்புகள் வேறு!

..ம்! இங்கு எனது சொந்தக்கதையும் சொல்ல வேண்டியதாகிறது!
நான் சொந்த வீடு கட்டிய சோகக்கதை!
பஞ்சாயத்து அப்ரூவல், வில்லங்க நகல், இப்படிக்கா சான்று, அப்படிக்கா சான்று என்று லோல் பட்டு, நாயாய் அலைந்து வங்கியில் கடன் வாங்கிவீடு கட்ட ஆரம்பிக்கும் நேரத்தில்..
அந்த தெருவில் இருக்கும் ஒரு நல்லவர்(!) என்னிடம் வந்து வணக்கம் போட்டார்!

எவ்வளவு குழந்தைகள்? என்று குசலம் விசாரித்தார்!
வீடு கட்டிமுடிக்க எவ்வளவு செலவாகும் என்றெல்லாம் கேட்டுவிட்டு..
வாழ்த்தும் சொன்னார்!

கடைசியில்..
சார்! ஒரு ஆயிரம் ரூபா தர முடியுமா?’ -அந்த நல்லவர்..
உங்களுக்கு எதற்கு நான் தர வேண்டும்?’-செம கடுப்போடு நான்!..

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நான் அபத்தமாக முடுவெடுத்த அந்த கர்மம் பிடித்த நாளிலிருந்து.. இது வரை நான் கிம்பளமாக அழுத பணம், அரை லட்சத்தை தாண்டி இருந்தது!!
அந்த கடுப்பில் அவனை துரத்திவிட்டேன்!

அடுத்தநாள் நான் வீடு கட்டும் இடத்திற்கு வந்து பார்த்தால், இருபது மூட்டை சிமெண்ட், தண்ணிரில் நனைந்து நாசமாகி இருந்தது!
விசாரித்து பார்த்தேன்! ஒன்றும் விளங்கவில்லை!
என்னிடம் ஆயிரம் ரூபாய் கேட்ட அந்த நல்லவன் அந்த தெரு தாதாவாம்!
அவனைக்கேட்டால்..நக்கலாக.. “யாருக்கு தெரியும்? நீயாச்சு! உன் வீடாச்சு! நம்ம கிட்ட வந்தே கீசிப்புடுவேன்!’ – என்று சொன்னான்!
பிறகு அவனிடம், நான் குசலம் விசாரித்து.. அன்புடன் நீங்கள் இதை வைத்துக்கொள்ளுங்கள்!’ என்று விடாப்பிடியாக கையில் ஆயிரம் ரூபாயை திணித்துவிட்டு வந்தேன்!
என் கதையை விட மோசமானது சினிமா எடுத்தவன் கதை!

பத்திரிக்கை பத்திரிக்கைக்கு விதவிதமான விமர்சனங்கள்!
ஒரு பத்திரிக்கை, ’நன்று! பார்க்காமல் இருப்பது நன்று!’ என்று எழுதும்!
இன்னொரு பத்திரிக்கை மார்க் போடும்!
27/100!
அப்புறம், ஸ்டார் ரேட்டிங்ஸ்!
படு சூப்பர்! சூப்பர்! டக்கர்! புஸ்! புஸ்ஸ்ஸ்!
இசையா இது! வசை!
வசனமா இது? விசனம்!
இப்படி நார்நாராக்கிழித்துப்போடுவார்கள்!

கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் கதை முழுவதும் எழுதிவிடுவார்கள்!
கிளைமாக்ஸில், ஹீரோவிற்கு அம்மாவே நஞ்சு தருவது கொடுமை! என்று எழுதி விடுவார்கள்!
பயங்கரமான ட்விஸ்ட்டு என்று கதை எழுதியவர் நினைத்திருப்பார்!
படைப்பாளிகளை உயிரோடு புடைப்பதுதான் பெரும்பாலான விமர்சனங்கள்!
அண்ணே! இதிலெப்படி லைட்டு வரும்?”- என்று செந்தில் கவுண்டமணியின் பெட்ரோமாக்ஸ் லைட் மாண்ட்டிலை நசுக்குவதைப்போல..
புதுப்படத்தின் கதையை நசுக்கி, மூட்டைப்பூச்சியை கொல்வது போல கொன்று.. விமர்சனம் எழுதி விட்டு, விமர்சகர் அடுத்த படம் பார்க்க போய்விடுவார்!
இதுதாங்க இந்த தமிழ்ப்பட விமர்சனங்களின் லட்சணம்!

விமர்சனம் செய்பவர்களின் தகுதி என்ன? அவர்கள் யார்..எந்த விபரமும் இருக்காது!
சில பத்திரிக்கைகளில், விமர்சனக்குழு என்று போட்டு விடுவார்கள்!
படமே பார்க்காமல், ஆபரேட்டரிடம் சில விஷயங்களை மட்டும் கேட்டுவிட்டு, மிகப்பிரமாதமாக விமர்சனம் எழுதக்கூடியவர்களும் இதில் அடக்கம்!

சரி! இப்ப.. உனக்கு என்ன பிரச்சினை? என்று நீங்கள் கேட்பது புரிகிறது!
அலட்சியமான முறைகளில், அடுத்தவர்களின் படைப்பை அலசும் அற்பப்போக்கு, தனக்கு என்று வரும்போது மட்டும், தர்மம் தாண்டவமாட வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது அல்லவா!
அதனால் தான் இந்த புலம்பல்!

திரைக்கலைஞர்கள், புகழையும் அள்ளுகிறார்கள், பணத்தையும் அள்ளுகிறார்கள் எனும்
அடிமனதில் இருக்கும் ஆழமான பொறாமையோடு..
விமர்சனங்களை எழுதுவது முறையல்ல!
பிறர் உழைப்பில், முறையற்ற பங்கு பெறுதலும் முறையோ?

நடிக, நடிகைகளை, தரக்குறைவாக எள்ளி நகையாடுவது,
அவர்களது நடிப்பை, அர்த்தமின்றி அதீதமாக அவமதிப்பது..
..ம்! இதெல்லாம் ஒரு ஜாலிக்காகத்தானே! சிறு குற்றம்தானே!என்று எண்ண வேண்டாம்.
சம்பந்தப்பட்ட கலைஞர்களின் மனம், ரணமாகும் என்பதை உணர்ந்தே எழுதுங்கள்!

சினிமா என்று வரும்போது, லாஜிக்கை மறந்து ரசிக்கப்பாருங்கள்!
பிடித்தால் கைகளைத்தட்டுங்கள்!
பிடிக்கா விட்டால் பாப்-கார்ன்
இருந்தால் சாப்பிடுங்கள்!
ஆனால் தத்தம் தம்பட்ட வாய்களை மூடிக்கொண்டு!

பாலா`வின் பரதேசி!
படத்தைப்பற்றி அதிகம் எழுதமாட்டேன்!

பார்த்து அனுபவியுங்கள்!

ஒவ்வொரு காட்சிகளையும், தன் உயிரைக்கொடுத்து செதுக்கியுள்ளனர்!
நம் கைகளை இழுத்து,1939 க்குள் அழைத்து சென்றுள்ளனர்!
அங்கே..கலை என்றால் என்ன? சினிமா என்றால் என்ன?

என்பதை பரவசத்தோடு காண முடிகிறது!


பரதேசியில் பாத்திரம்கொண்ட அத்துணை கலைஞர்களின் ஆவேச அர்ப்பணிப்புகளை அங்கே காணமுடிகிறது!
சினிமா என்றால் இப்படித்தான், இருக்க வேண்டும் என்கிற சிலிர்ப்பு ஏற்படுகிறது.





இப்படிப்பட்ட படத்திற்கும் சில சில்லறை விமர்சனங்கள்!


விமர்சனமெனும் விஷ ஊசி எடுத்து, அரை குறையாய் அலசும் அற்பர்களின் முகத்தில் காறி உமிழ வேண்டுமென்று ஆத்திரம் வருகிறது!

பரதேசி படத்தில் வக்கிரம் எங்கே வருகிறது? தேடித்தேடி பார்த்தேன்! பார்த்தவனின் மனதில்தான் வக்கிரம் ஒரு வண்டியளவு கிடைத்தது!


பாலாவின் அற்புத படைப்புத்திறமையைக்கண்டு, பொறாமல், பொறாமையில் பொசும்பி புரளும் புண்ணாக்கு மனித ஜென்மங்கள்தான்,விமர்சனம் எனும் விபரீத போர்வைக்குள் ஒளிந்து கொண்டு, விஷத்தைக்கக்கி மாய்கிறார்கள்!

ஒவ்வொரு காட்சியும் ஓவியம்!
ஒவ்வொரு வசனமும் காவியம்!

கடும் உழைப்பை அங்கே காண முடிகிறது!
கலை ஒவ்வொரு காட்சிதனிலும் வாழ்கிறது!

இப்படிப்பட்ட படத்தைப்பார்த்து, வாய் கூசாமல் பழிக்கும் பதர்களை,
ஒரு ரசிகன் எனும் முறையில்,கனத்த இதயத்துடன், கண்டிக்கிறேன!


-திருநாவு