Popular Posts

Wednesday, December 28, 2016

ஐஸ்வர்யா ஆண்கள் அழகு நிலையம்!



Image result for gents beauty parlour in chennai
ஐஸ்வர்யா ஆண்கள் அழகு நிலையம்!
ரொம்ப நாளா மனசுக்குள்ள ஒரு ஆசை! நாம் ஏன் அங்கு போய் நம்மளை நாமே சிறப்பிச்சிட்டு வரக்கூடாதுன்னு!
பர்ஸில் செலவே ஆகாம பிங்க் கலர் நோட்டு ரெண்டு சும்மா கிடந்ததிச்சு!
அதாம்லே சில்லரையே கிடைக்காத 2000 ரூவா நோட்டு!
யாரும் நம்மளை பார்க்கல’ன்னு செக் பண்ணிட்டு நைஸா ஐஸ்வர்யா அழகு நிலையத்திற்குள் நுழைஞ்சாச்சு. ரிசப்ஷன்லே ஐஸ்வர்யான்னு நினைக்கேன். நிறைய பவுடரை முகத்தில் அப்பிட்டு ஒரு வொய்ட் கரகாட்டக்காரி மாதிரி அம்மிணி உக்காந்திட்டு இருந்துச்சு.
”ப்ளிஸ்! கம் இன் சார்!” – வாட் ஏ ஸ்வீட் வாய்ஸ்!
”ம்! இது ஆண்களுக்கான அழகு நிலையம்தானே?” – கரகர குரலில் நான்.
”டெபனெட்லி! டெபனெட்லி! ப்ளீஸ் டேக் யுவர் சீட் சார்!”
-கூச்சமாக இருந்தாலும் அமர்ந்து கொண்டேன்.
சுனாமி, சென்னை மழை, வெள்ளம்,வர்தா புயல் இப்படி எத்தனையோ பார்த்தவன் நான்.
இருந்தாலும் பவுடர் போட்ட பெண்களுடன் பார்த்து பேச எப்பவுமே நடுக்கமா இருக்குது!
என்னை நானே மனசுக்குள் திட்டிகிட்டேன்.
“சார்! இதைப் பாருங்க!” – பளபள’ன்னு இருந்த ஒரு புக் ஒன்றை எடுத்து தந்தார் ஐஸ்வர்யா.
எல்லாமே இங்கிலீஸில் இருந்தது.
பேஸியல் – ரூ 1000
ப்ளீச்சிங் கம் பேசியல் – ரூ 2500
இப்படி நிறைய இருந்திச்சு. சத்தியமா புரியல.
“இதென்ன சரவணா பவன் மெனு கார்டு மாதிரி இருக்கே? “
“சார்! ஏதாவது சொன்னீங்களா?”
“நோ..நோ!”
நான் மெனு கார்டை முறைத்துப் பார்த்து கொண்டிருக்கும்போதே அந்த பவுடர் அம்மிணி, யாருக்கோ போன் செய்தது. உடனே ஒரு பெண் அழகான க்ளாஸில் ஜில் வாட்டர் கொண்டு வந்து கொடுக்க.. நானும் ஜம்பமாக வாங்கி கொஞ்சமாக குடித்து விட்டு கீழே வைத்தேன்.
“சார்! ஏதோ விசேத்திற்கு போறீங்கன்னு நினைக்கேன்!” – ஐஸ்வர்யா
‘ஐஸ்வர்யா ஏன் இங்கிலீஷில் பேசல? ஒருவேளை இங்கிலீஸ் தீர்ந்து போச்சோ..? அல்லது எனக்கு இங்கிலீஸ் தெரியல என்பது தெரிஞ்சு போச்சோ?’
“ஆமாங்க. ஒரு முக்கியமான கல்யாணத்திற்கு போகணும். மாப்பிள்ள விஐபி! அதான்.. ” –சமாளிச்சேன். டுமீல்தான்!
“அப்ப ரொம்ப நல்லதா போச்சு. பேஸியல், ப்ளிச்சீங், ஹேர் கட் , டை இப்படி அசத்திடலாம் சார்! மாஸ்டர் பேக்கேஜ் எடுத்திடுங்க! ட்வெண்டி பர்சன்ட் உங்களுக்கு ரிபேட் வாங்கித்தர்றேன். அதுக்கு அப்புறம் பாருங்க! ஒரு பத்து வருஷம் குறைஞ்ச மாதிரி லுக் வந்திடும் சார்!”
“எனக்கோ ஜஸ்ட் ஐம்பது வயசுதான் ஆச்சு! ஆனா ரிடர்ய்மெண்ட் ஆயிடுச்சான்னு பார்பர் ஷாப்’லே கேடு கெட்ட மனுசன், சம்மட்டியால் அடித்தது போல கேட்டது ஞாபகத்திற்கு வந்தது’
“மாஸ்டர் பேக்கேஜ்னா எவ்வளவு ஆகும் மேடம்?” – ஒரு நாப்பது வயது லுக் வந்தாலே போதும்! அசத்திடலாம்! ஆசை! ஆசை! அம்புட்டும் பேராசை!
“ஜஸ்ட் ஃபிப்பீடீன் தவுசண்ட் ! ட்வெண்டி பர்சண்ட் ரிபேட் போட்டுப் பார்த்தா டுவல் கே ஆகும் கேஷா? கார்டா சார்?”
‘ஆ.. பன்னெண்டு ஆயிரமா? அது என் ஒரு மாத சம்பளம்! அடியேய்.. நான் இன்னும் சரின்னு சொல்லவே இல்லை! நீ ஏதாவது பில் போட்டு தொலைச்சிராதே!”
டிவிட்டர்லே யாரோ ஹேர் ஸ்டெட்ரினிங்னு ஏதோ எழுதி இருந்தது திடீர்னு ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. விலையை கேட்டவுடன் என்னுள் இருந்த பயம், நடுக்கம் எல்லாம் மறைந்து அதுவே பீதியாக உருவெடுத்து ஆட்டம் போட ஆரம்பித்து விட்டது.
“ப்ளிச்சிங் எல்லாம் வாணாம். மூஞ்சி என்ன ரெஸ்ட் ரூமா என்ன? ..ம்! ஹேர் ஸ்டெட்ரினிங் செய்யணும்!”
ஐஸ்வர்யா பாப்பாவுக்கு சிரிப்பு வந்தே விட்டது.
“ஏம்மா? எதுக்கு சிரிக்கே?” –இதுக்கு முன்னாடி நான் அவரை மேடம்னு சொன்னதை நோட் பண்ணிக்கணும்.
“சார்! அதெல்லாம் லேடிஸ் விஷயம். உங்களுக்கு ஏனாம்?”
அப்பாடா! எனக்கு இதுதான் வேணும். ஏதாவது பேசிட்டு தப்பிச்சு வந்திடலாம்னு மனசுக்கு மாஸ்டர் ப்ளான் போட்டாச்சு.
“நோ! ஜப்பான்லே ஆண்களும் ஹேர்-ஸ்டெட்ரினிங் செய்வாங்க. ஜப்பான்-ரவி சொல்லியிருக்கார்!”
“ஓ! ஸாரி சார். தாராளமா செய்திடலாம். பைவ் தவுஸெண்ட் இருந்து டென் தவுசண்ட் வரைக்கும் ஆப்பர் இருக்கு. அப்பாய்மென்ட் பிக்ஸ் பண்ணிடறேன் சார்!”
ஒரு நோட்டை எடுத்து ஐஸ்வர்யா ஏதோ தேட..எனக்கு செம கடுப்பாயிடுச்சு.
“என்னம்மா பவ் தவுசண்ட் சொல்றே. லிசன் மை ரிக்கொயர்மெண்ட் ஃபர்ஸ்ட்!”
“ஓ! சொல்லுங்க சார்!”
-எப்படீ! நான் இங்கிலீஷ் பேச ஆரம்பிச்ச உடன் பயந்திடுச்சு போல. கம்பெனியில் எனக்கு இவ்வளவுதான் இங்கிலீஸ் வரும்னு எல்லோருக்கும் தெரியும். ஆனா ஐஸ்வர்யாவுக்கு அது தெரியாது.
“..ம்! தலைலே முன்னாடி இருக்கிற முடிகளை மட்டும் ஸ்டெட்ரினிங் பண்ணினாப் போதும். பேக் ஸைடு நான் பார்த்துகிறேன். இப்ப உங்க கொடொஷனை சொல்லுங்க!”
என் முன் மண்டையை பார்த்த ஐஸ்வர்யா “சார்! முன்னாடி முடி ரொம்ப கம்மியா இருக்கு.. அதை எதுக்கு…”
”அதுதாம்மா பிரச்னையே! அடிக்கடி கலைஞ்சு போயிடுது. லேசா காத்து வீசினாலே முன்னாடி இருக்கிற முடிகள் டிஸ்டர்ப் ஆயிடுது, வெரி சென்ஸ்ஸிட்டி ஹேர்ஸ்! ப்ளீஸ் டயாக்னைஸ் அண்ட் ப்ரிஸ்கரைப்!”
ஐஸ்வர்யா என்ன நினைத்தாரோ தெரியல. கொஞ்ச நேரம் யோசித்தாள். ஏதோ மன்ந்த்லி டார்கெட் இருக்கும் போல. எதுக்கு வந்த கிராக்கியை துரத்தனும்னு நினைச்சிருப்பாங்கன்னு ஊகித்தேன்..
“சரிங்க சார்! முன் தலை முடிகள் பொதுவா சொன்ன பேச்சு கேட்காது. ஆனா எங்க ப்யூட்டி மாஸ்டர் நிச்சயம் அதை சரி பண்ணி விடுவார். அவருக்கு சேலஞ்ச்’னா ரொம்ப பிடிக்கும். அட்வான்ஸா ஆயிரம் ரூவா கட்டிடுங்க சார்! நான் அப்பாய்மெண்ட் புக் பண்ணிட்டு போன் செய்கிறேன்”
“ஏம்மா இது உனக்கே நல்லா இருக்கா? முன் தலைலே இருக்கிறது மொத்தம் நாப்பத்து ரெண்டு முடிக. அதுக்கு இவ்வளவு சார்ஜா?”
நானே என்னை சொட்டைத்தலை என்று பறை சாற்றிய நேரம்! ஐஸ்வர்யா பிடியில் இருந்து பங்கம் வராம தப்பிச்சே ஆகணும் இல்லே!
 ”சார்! இங்க வர்றதுக்கு முன்னாடி எண்ணிட்டே வந்திட்டீங்க போலிருக்கு”
ஐஸ்வர்யா பேச்சில் சற்று மரியாதை குறைவதை கவனித்தேன்.
“எண்ணித் துணிக கர்மம்னு வள்ளுவரே சொல்லியிருக்கார்.  நீங்க ரேட்டு எவ்வளவு’ன்னு சொல்லுங்க. அப்பத்தான் நான் மேல ப்ரஸீட் பண்ண முடியும்”
நான் பதிலடி கொடுப்பதை பவுடர் அம்மிணி ஊகித்து விட்டார் போலும்.
“சார்! நீங்க இன்னொரு நாளைக்கு வாங்க. மேனேஜர் கிட்ட பேசிட்டு சொல்றேன்..”
ஆஹா! என்னை துரத்த அவரே முடிவு செய்து விட்டார்! வெற்றி! வெற்றி! வெற்றி!
“யு ஸீ! ஐ எம் எ ஃபேமஸ் டிவிட்டர்.. நான் சொன்னா நிறையப்பேர் உங்க கடைக்கு வருவாங்க!”
“ஓ! நீங்க பேமஸ் பிட்டரா? எந்த கம்பெனி சார்? எங்க அண்ணாவும் ஒரு பிட்டர்தான்!”
“பிட்டர் இல்லீம்மா.. பீட்டர்! ..ச்சே! டிவிட்டர்! பேஸ் புக் மாதிரி. நம்ம பிஎம் மோடி கூட அதில் இருக்கார்!.”
‘ஓ! அந்த குருவி படம் போட்ட பேஸ் புக்கா சார்! அங்கே போயிருக்கேன். ஒரு கருமாந்திரமும் புரியல! திரும்ப வந்திட்டேன். ஸாரி சார்!”
பாப்பா நம்மளை ட்விட்டர் ஓனர்னு நினைச்சிடுச்சு போல. டேக் அட்வான்டேஜ்’னு மனதிற்குள் ஒரு அசரீரி!
“உங்களுக்கு ஆல் தோட்ட பூபதி தெரியுமா?”
”அந்த பாட்டு செமயா இருக்கும்! உங்களுக்கும் பிடிக்குமா சார்!”
“சென்னிமலையார் தெரியுமா? அவர் ஜோக் அடிச்சா நீங்கெல்லாம் சிரிச்சிடுவீங்க!”
“அண்ணாமலை சாமிதான் எங்க குலதெய்வம். சென்னிமலை-கோயில் சாமி ஜோக் எல்லாம் அடிக்குமா சார்?”
-அட! இந்த புள்ள நம்மள வேற ஏதோன்னு நினைச்சிடுச்சு போல. அலர்ட் ஆகிட்டேன்.
“ஆளுமை தெரியுமா? ஆளுமை! சொன்னா பிச்சு போடுவார்“
“என்ன சார்! ப்யூட்டி பார்லர் நடத்தறோம். எல்லா டைப் மையும் இங்க இருக்கு! நாங்களே அதை ஓப்பன் பண்ணும் போது சில சமயம் பிச்சு போடுவோம் சார்!”
-ஆஹா! நம்மள பாப்பா கலாய்க்க ஆரம்பிச்சிடுச்சு போல! சீக்கிரம் இடத்தை காலி பண்ணிடலாம்.
“அமாஸ், நந்து இவுகளை தெரியுமா?”
”சார்! நீங்க தமாஷா பேசறீங்க!”
“நீங்க ஒரு பிரபலத்திற்கிட்ட பேசிட்டு இருக்கீங்க. சரி! பரவாயில்ல! நானே என் ட்விட்டை ஆர்டி பண்ணினா நல்லா இருக்கான்னு பாக்கேன்”
“சார்! என்னென்னமோ பேசறீங்க! ஒண்ணுமே புரியல!”
“..ம்! அதைத்தான் நாங்க ட்விட்டர்னு சொல்றோம்!”
அப்ப பார்த்து ஐஸ்வர்யாவுக்கு ஏதோ போன் வர..
 “சரி! நீங்க மானேஜர் கிட்ட பேசி கொடேஷனை ரெடி பண்ணி வைங்க! நாளைக்கு வர்றேன்!”
எஸ்கேப்! 
*******************************************************************************************
பின் குறிப்பு: உரிமையோடு சில நண்பர்களை கலாய்த்திருக்கேன். மன்னிக்க!