Popular Posts

Tuesday, July 9, 2013

வள்ளி ஓடி விட்டாள்!




வட்டிக்கடை வடிவேலு வீட்டுக்குத்திரும்பும்போது, இரவு மணி பத்தை தாண்டியிருந்தது!
கலெக்ஷன் ஓரளவுக்கு பரவாயில்லை!
வெள்ளிக்கிழமை வியாபாரம் அப்படித்தான் இருக்கும்!!
கையில், மல்லிகைப்பூ ஒரு முழமும், நூறு கிராம் இனிப்பு பூந்தியும் வாங்கி வைத்திருந்தான்.
மல்லிகைப்பூ வாசம் வடிவேலுக்கு பிடிக்கும்!
இனிப்பு-பூந்தி, வள்ளிக்கு பிடிக்கும்!
நடக்க, நடக்க, வள்ளியின் சுகந்தமான நினைவுகளும், வடிவேலுவுடன் நடக்க ஆரம்பித்தது!
அழகான மனைவி! மெத்தப்படித்த அறிவுள்ள குணவதி! அதிகம் பேச மாட்டாள்! பேசினாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்!
பத்தாவது வரைக்கும். திணறி திணறி படித்த வடிவேலுக்கு, வள்ளி ஒரு வரப்பிரசாதம்!
வட்டிக்கடை மூலம் சேர்த்த அபரிதமான சொத்துகள்தான், வள்ளியை, தன் வசம் சேர்த்தது என்கிற உண்மையை வடிவேலு, உணர்ந்தாலும் அதை அதிகம், வெளிக்காட்டிக்கொள்வதில்லை!
இதோ! வீடு நெருங்கிவிட்டது! களைப்பையும் மீறி, வடிவேலுவை உற்சாகம் தொற்றிக்கொண்டது!
வீட்டின் கதவு சாத்தியிருந்தது! வழக்கமான ஒன்றுதான்!
களவாணி பசங்க நிறைந்த ஊராயிற்றே! எப்பொழுதும் கதவை சாத்தியே வைக்க வேண்டும்! யாராவது தெரியாதவர்கள் வந்தால், கதவை திறக்கவே கூடாது என்று பல எச்சரிக்கை, பாதுகாப்பு விஷயங்களை, வள்ளிக்கு, வடிவேலு கற்றுக்கொடுத்திருந்தான்!
கதவை வேகமாக தட்டினான்!
வா! வெண்ணிலா! உன்னைத்தானே வானம் தேடுது!” - வாய் தானாகவே அந்தப்பாட்டை மெல்ல வாசித்தது!
கதவு திறப்பதற்கான அறிகுறியே இல்லை!
சற்று ஆச்சரியம் அடைந்த வடிவேலு, மீண்டும் கதவை ஓங்கித்தட்டினான்!
என்ன ஆயிற்று? ஏதாவது உடம்பு, கிடம்பு சரியில்லையோ?”
சற்று கிலேசம் அடைந்த வடிவேலு, அப்போதுதான் வீடு பூட்டப்பட்டிருப்பதைப்பார்த்தார்!
எங்காவது போவதாக இருந்தால், சொல்லாமல் போக மாட்டாளே? என்ன ஆயிற்றோ?” – பதைப்பதைப்போடு, தன்னிடமிருந்த இன்னொரு சாவியைக்கொண்டு, வீட்டைத்திறந்தார்.
இருண்டு கிடந்தது வீடு!
விளக்குக்கூட போடாம, எங்க போய்த்தொலைந்தாள்?” -சற்று எரிச்சலோடு, ஸ்விட்சைப்போட, வீடு சற்று வெளிச்சம் பெற்று, பிரகாசம் ஆனது.
சலிப்போடு, மல்லிகைப்பூவையும், பூந்திப்பாக்கெட்டையும், மேஜையில் வைக்கப்போன, வடிவேலு அதிர்ந்தான்!
வள்ளியின் தாலி அங்கே வைக்கப்பட்டிருந்தது! அதன் கீழ் அழகாக, மடித்து வைக்கப்படிருந்த, ஒரு கடிதம்!
கடிதத்தை எடுக்கும் அவசரத்தில், மல்லிகைப்பூக்களும், இனிப்பு பூந்திகளும், கைகள் தவறி தரையில் விழுந்து சிதறின!
சற்று நடுக்கம், பயத்திற்கு ஆளான, வடிவேலு, பதைப்பதைப்போடு, அந்த கடிதத்தைப்பிரித்து படிக்க ஆரம்பித்தான்!

அன்புள்ள மாஜி கணவர் வடிவேலுவுக்கு, வள்ளி தாழ்மையுடன் எழுதிக்கொள்வது. நான் தங்களைப்பிரிகிறேன். சற்று கொச்சையாக சொல்ல வேண்டுமென்றால், நான் இன்னொருவரை இழுத்துக்கொண்டு ஓடிப்போகிறேன்! இப்படி எழுத எனக்கே அவமானமாகத்தான் இருக்கிறது! ஆனால் வேறு வழியில்லை. உண்மைகள், பல சமயங்களில் அவமானகரமாகத்தான் இருக்கிறது! தேட முயற்சிகள் வேண்டாம்! அது பயனளிக்காது என்பதால், நீங்கள் என்னை தேடுவதோ, அல்லது மீண்டும் சேர்ந்து வாழ முயற்சிப்பதோ தேவையற்றது. அர்த்தமற்றதும் கூட!
   “நான்கு வருட தாம்பத்தியம்! எப்படி பாதியில் விட்டு போகிறாய் நீ! என்ன குறை வைத்தேன் நான்?” – என்று நீங்கள் கேட்கலாம்! விளக்கம் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்! நல்ல வேளை! நமக்கு குழந்தைகள் இல்லை! அப்படி இருந்திருந்தால், நான் இந்த முடிவை, ஒருவேளை எடுத்திருக்க மாட்டேன். சரி! நான் ஓடியதற்கு விளக்கம் சொல்கிறேன்!
உங்கள் மீது எனக்கு எந்தவிதமான வெறுப்புகளும் இல்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்! நிறைய சொத்துகள்! மூன்றுதலைமுறைக்கும் தேவையான சொத்துகளை குவித்து வைத்திருக்கின்றீர்கள்! வட்டிக்கடை வருமானத்தால், லட்சுமி-கடாட்சம் குறைவின்றி கிடைத்துள்ளது!
பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட கல்யாணம்! மாப்பிள்ளை நல்ல சொத்துக்காரர்! எந்தவிதமான கெட்ட பழக்கங்களுமில்லை! படிப்பு மட்டும் குறைவு! என் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ அது ஒரு குறையாகப்படவில்லை! போஸ்ட்-கிராஜுவேட் படித்த, வள்ளிக்கு, ஒரு பத்தாம் கிளாஸ் பாஸான மாப்பிள்ளை! நான் சற்று அவமானப்பட்டாலும், குடும்ப கௌரவத்தை மனதில் கொண்டு என்னால் மறுக்கவோ, போராடவோ முயலவில்லை! கல்யாணம் நிச்சயம் ஆனவுடன், கறாராக, வரதட்சிணைகளை நீங்கள் வாங்கிய விதம் மனதை நோகடித்தது. அப்பா, ”இதுவெல்லாம் பரவாயில்லையம்மா! உனக்குதானே தருகிறேன்!” – என்று என்னை சமாதானப்படுத்தியபோது, வெட்கப்பட்டேன்.
இந்த கல்யாண முறை, என் உள் மனதிற்கோ, அல்லது வெளி மனதிற்கோ சற்றும் ஒப்பவில்லை! ஏதோ, சந்தையில், கறவை மாடு விற்கப்படுவதை போல ஒரு உணர்வு ஏற்படுகிறது! கறவை மாடு வாங்குபவன், கொஞ்சம் பணமாவது தருகிறான்! ஆனால், நம் முறையில், கறவை மாட்டை விற்பவன், வாங்குபவனுக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கின்றது! வீட்டிலிருந்து துரத்தப்படுவதைப்போல மனதிற்குப்பட்டது! பெண்ணாய் பிறந்து விட்டால் இப்படித்தான்! என்று அம்மா ஆறுதல் சொன்னார்!
அசிங்கமாக மனதுக்கு பட்டது என்றாலும், இதுதானே, நமது பண்பாடு, வழக்கமுறை என்று மனதை தேற்றிக்கொண்டு, விதி வழியே..வாழ்க்கை செல்லட்டும்! என்றே உங்களை கரம் பிடித்தேன்! வாழ்க்கையை புரிந்து கொள்ள கடும் முயற்சிகள் செய்தேன்!
சிக்கனம் உங்கள் ரத்தத்தில் ஊறிவிட்டது! தினப்பத்திரிக்கை, வாரப்பத்திரிக்கை வாங்கலாம் என்று ஆசைப்பட்டு கேட்ட போது, ”வீட்டில்தானே இருக்கிறாய்! பழைய பத்திரிக்கைக்கடையில் வாங்கிக்கொள்ளலாம்! செலவு மிச்சமாகும்!” என்று நீங்கள் சொன்னபோது அதிர்ந்து போனேன்! எல்லோரும் இன்று படிக்கும் பத்திரிக்கைகளை, நான் நாளைக்கு படிக்க வேண்டும்! செய்திகளின் முக்கியத்தை விட சொற்ப பணம்தான் முக்கியமாக பட்டது உங்கள் மனதுக்கு!
நான், டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது, சற்றுகூட லட்சியம் செய்யாமல், நீங்கள், சேனல்களை மாற்றி பார்ப்பது ஏதோ..சிறு விஷயம் என்று நினைக்கிறீர்கள்! கடுமையான அத்துமீறல்! என்று நான், மனதுக்குள் குமைவது, உங்களுக்கு புரிவதில்லை!
சரி! அதையும் விட்டு விடலாம்! மளிகை சாமான்கள் வாங்குவதிலும் உங்கள் கை வண்ணம்தான்! தரமான பொருள்கள் வாங்குவதில்லை! விலை குறைவாக, மலிவான பொருட்களாய் வாங்கித்தருகிறீர்கள்? சமையல் எண்ணை எவ்வளவு பயன்படுகிறது? என்கிற விவரம்கூட உங்கள் கை நுனியில்! சிக்கலான சிக்கனம், கொஞ்சங்கூட புரிந்து கொள்ள முடியாத உங்களது ஒரு வழிப்பாதை மனப்பக்குவம்!
ஆசை, பாசம் இருந்தால் மட்டும் பயனில்லை! அவை மற்றவர்களுக்கு பயன்படுவதாக இருக்கவேண்டும்!
 எனக்குக்கூட பயன்படாத, உங்கள் சொத்து, அன்பு, எனக்கு சுமையாகவும், அவமானமாகவும் உள்ளது! சரி! ஆதரவாக யாராவது பேசுவார்கள் என்று, அக்கம்பக்கம் சென்றால், வட்டிக்கடைக்காரன் மனைவி என்றே, அடையாளம் காணப்படுகிறேன்! நான்கு வருடம், வயிற்றில் கரு வளரவில்லையே! என்று நான் கவலைப்பட்டால், என் முதுகிற்கு பின்னால் இருந்து, “கந்து வட்டி வாங்கும் உங்களுக்கு சந்ததி பாக்கியம் வராது!” என்று காதுபடவே பேசுகிறார்கள்! கூனிக்குறுகிப்போனேன். என்னால் உங்களைப்புரிந்து கொள்ள முடிகிறது! ஆனால், என்னைப்பற்றி, நீங்கள் புரிந்துகொள்ளக்கூட முயற்சிப்பதில்லை! ..ம்! அப்படியே முயற்சித்தாலும் உங்களால் முடியாது! வட்டிக்கணக்குகளைக்கொண்டு, வள்ளியை புரிந்துகொள்ள முடியாது!
நன்றாகவே யோசித்தேன்! இப்படியே வாழ்ந்துவிட எனக்கு சம்மதமில்லை! வள்ளி, வள்ளியாக வாழ வேண்டும்! சரியோ, தவறோ..அந்த சுதந்திரமாவது எனக்கு வேண்டும்!
 நான் ஓடிவிட்டதாக எல்லோருக்கும் அறிவித்துவிடுங்கள்! மீண்டும் ஒரு மனைவியை தேடிக்கொள்ளுங்கள்! அவள், நீங்கள் புரிந்து கொள்ளக்கூடியவளாக இருக்கட்டும்! வாழ்த்துகள்!
என்னுடன் ஓடி வருபவன், எனக்கேற்றவனாக இருந்தால், அவனோடு வாழ்க்கையைத்தொடர்வேன்! இல்லையென்றால், இன்னொருவனுடன் ஓடி விடிவேன்! எனக்கேற்ற துணை கிடைக்கும் வரை ந்த ஓட்டம், தேடல் தொடரும்!
ஓடிப்போனவள் என்ற பட்டமாவது, வள்ளிக்கு சொந்தமாகட்டும்!
இப்படிக்கு,
வள்ளி (ஓடிப்போனவள்)
கீழே சிதறிக்கிடந்த, மல்லிகை மலர்களும், இனிப்பு பூந்திகளும், திக்பிரமை பிடித்து சிலையாய்  அமர்ந்திருந்த வடிவேலுவை, புரியாமல் பார்த்தன!