எனக்கும் அவனுக்கும் சுமார் மூன்று வருட சிநேகிதம்.
எத்துனை ஜென்ம உறவு என்று தெரியாது..அவ்வளவு பாசப்பிணைப்பு.
என்னைப்பார்க்கும் பார்வையிலே, அன்பும் கருணையும் அவன் கண்களில் தெரியும்.
காலையில், என்னை ஆபிஸுக்கு அனுப்பி வைத்துவிட்டு எங்கு செல்வான் என்று தெரியாது. ஆனால், மாலையில் நான் பிரிட்ஜ் விளையாடும் கிளப்’பிற்கு சரியாக வந்து விடுவான்.
அங்கு எனது மோட்டார் சைக்கிளுக்கு அருகில் படுத்து கொண்டு, நான் வரும் வரை..காவல்!
ஒருவேளை, நான் அங்கு இல்லாவிட்டால், நான் எங்கு போயிருப்பேன் என்று யோசித்து...நீச்சல் குளம் தேடி வந்து விடுவான். அங்கும், எனது பைக் இல்லாவிட்டால், அலுவலகம் தேடி வருவான்...
’உன்னைத்தேடிக்கொண்டு, சீஸர் வந்தாரப்பா!’ என்று நண்பர்கள் தகவல் தருவார்கள்.
சீஸருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஊரறிய ஆரம்பித்தது.
சீஸர் அந்த தெருவுக்கே..டான்’ -ஆக இருந்தான்.
அந்தத்தெருவில் இருந்த அத்தனை நாய்க்குட்டிகளுக்கும் அவன்தான் தகப்பன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
மற்ற நாய்களிடமும், சீஸரின் அணுகுமுறை சிறப்பானதாகவே இருந்தது.
-பொதுவாக சீஸர் இருக்கும்போது, மற்ற நாய்கள் சாப்பிடக்கூடாது! முடியாது!.
ஆனால், சீஸர், அந்த தெருவில் போடப்படும் உணவுகளை, முகர்ந்துபார்த்துவிட்டு, “சரி..நீயே சாப்பிடு!’ என்பது போல விட்டுவிடும். அதன் பிறகுதான், மற்ற நாய்கள் உணவருந்தும்.
அடுத்த தெரு, நாய்களுக்குக்கூட, சீஸரின் மீது மதிப்பும், மரியாதையும், பயமும் இருந்தது.
சீஸர் இருக்கும்போது, மற்ற நாய்கள், எனது பக்கம் பார்த்தாலே, சீஸர் சீறி விடும்!
சீஸர் மட்டுமே, என்னுடன் செல்லமும், உரிமையும் கொண்டாட வேண்டுமாம்!
நான், தவறிப்போய், மற்ற நாய்களை, தொட்டு தடவி, அன்பைக்காட்டினால் போதும்..சீஸர் முகம் வாடி வதங்கி விடும்!
நான் இப்படி தெரு நாய்களிடம் அன்பு காட்டுவது கண்டு, சிலருக்கு அறுவெறுப்பு!
உயர் ரக நாய்களை, வளர்க்க ஃபீரியாகவே தரத்தயாராக இருந்தார்கள்.
’நாய், சுதந்திரத்தோடு, வாழ வேண்டும், வீட்டுக்குள் வைத்து, வாழாவெட்டியா அதை மாற்றி விடக்கூடாது’ என்று நான் நம்பியதால், வீட்டுக்குள் செல்ல நாய் வளர்ப்பதை நான் மறுத்தேன்.
ரொம்பவே உஷாராக இருக்கும் சீஸர், ஒரு நாள், ப்ளூ-கிராஸ் வேன் வரும் போது மாட்டிக்கொண்டது.
“எங்கே சீஸரைக்காணவில்லையே?”- என்று நான் தேட ஆரம்பித்த போது, சீஸர்,
ப்ளூ கிராஸ் கிராதகர்களிடம், மாட்டிக்கொண்ட கதையைச்சொன்னார்கள் நிஜமான விசனத்தோடு.
காஞ்சிபுரம் ப்ளு-கிராஸ் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு, கேட்ட போது, அதற்கு, குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்துபின், மீண்டும் அதே இடத்திற்கு, கொண்டுவந்து விட்டுவிடுவோம்..என்று தகவல் தந்தார்கள்.
அவர்கள் சொன்னதுபோலவே, ஒரு 20 நாட்கள் கழிந்து, சீஸர் திரும்பவும் வந்துவிட்டான்!
’பரவாயில்லையே..இந்த ப்ளு-க்ராஸ்!”- என்று மெச்சிக்கொண்டேன்.
ஆனால், அங்கு நடந்த கொடுமைகளை, என்னிடம் அவன் சொல்லி அழுதது எனக்கு மட்டும்தான் புரிந்தது. அனேகமாக, அந்த ஆப்ரேஷன் கஷ்டமான ஒன்று என்றே எண்ணுகிறேன்.
எனக்கும், சீஸருக்கும்மான புரிதல் விஷேஷமானது.
சீஸரில் பாஷை, எனக்கு புரிகிறது என்று சீஸர் நம்பினான்!
நான் பேசினால், கவனித்து, பதிலுக்கு அவனும் ஏதாவது சொல்லுவான்.
சீஸரின், பெண் நண்பர்கள், விஷயம் புரியாமல், சீஸரிடம் வந்து குடும்பம் நடத்த முயற்சி செய்தன. சீஸர், என்னிடம் வந்து சொல்லி அழுதான்.
“ஏதாவது செய்து..என்னை, மீண்டும் பழைய சீஸராக மாற்றிவிடு!’-என்று அவன் கேட்டது எனக்கு தெளிவாகவே புரிந்தது.
‘பரவாயில்ல..விடு!’-என்று ஆறுதல் மட்டும்தான் என்னால் சொல்ல முடிந்தது.
சீஸரின் கண் முன்னரே, அந்த பழைய நண்பிகள், சோரம் போனதை, சீசர் சகித்துக்கொள்ள வேண்டியதாகிற்று.
’சரி! இனி நம் வாழ்க்கை இப்படித்தான்....’ என்று, சீஸரும், கொஞ்ச நாட்களில் புரிந்து கொண்டான்.
கடந்த மாதம், காலை மணி பத்து என்று நினைக்கிறேன். ஒரு ஃபோன் வந்தது.
“ஸார்! உங்க சீஸரை..ப்ளு-கிராஸ் காரங்க பிடிச்சுட்டாங்க! வண்டியிலே ஏத்தறாங்க! சீக்கிரம் வாங்க!” -பதட்டத்தோடு ஒரு நண்பர் பேசினார்.
நானும், உடனே அங்கு விரைந்தேன்.
நண்பர் சொன்னது உண்மைதான்.
சீஸர் கழுத்தில் கயிற்றை மாட்டி, ப்ளூ-க்ராஸ் வண்டிக்குள் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.
என்னைக்கண்டவுடன், சீஸருக்கு மேலும் நம்பிக்கை வந்து விட்டது.
ஆக்ரோஷத்தோடு போராடினான்.
“இந்த நாய்க்கு ஆப்ரேஷன் செய்து விட்டார்கள். காதைப்பாருங்க! அதற்கான அடையாளம் இருக்கின்றது.”-என்று நான் பதற..
“ஆமாங்க. யாரு இல்லைனாங்க. ஆப்ரேஷன் பண்ணியாச்சுதான். ஆனா..இதற்கு வியாதி பிடித்துள்ளது. அதற்கான, வைத்தியம் செயத பின்னர், மீண்டும் இதே இடத்தில், கொண்டு வந்து விட்டுவிடுவோம்.”- என்று அவர்கள் சொல்ல..
“நிச்சயம் கொண்டு வந்து விட்டுடுங்கோ!”-என்று நான் வேண்டிவிட்டு..
சீஸரைப்பார்த்தேன்.
“இப்படி விட்டுவிட்டாயே..நீ வந்துமா அவர்கள் என்னைப்பிடித்துச்செல்கிறார்கள்? அடச்சீ!”- என்று சீஸர் சொல்லவில்லை...
அது வழக்கம்போல நம்பிக்கையாகவே என்னைப்பார்த்தது.
‘சரி! வைத்தியம் முடிந்த பின், மீண்டும் விட்டுவிடுவார்கள்’-என்று நம்பி..சீஸருக்கு ‘டாட்டா’ செய்தேன் நான். மனதுக்குள் ஏதோ ஒரு உறுத்தல் மட்டும் இருந்தது.
ஆம்! அதற்கு பின்னர் சீஸர் வரவில்லை.
(பின்குறிப்பு: காஞ்சிபுரம் ப்ளூ-க்ராஸ்க்கு ஃபோன் மூலம் தகவல் கேட்ட போது, முதலில் மழுப்பலாக பதில் சொன்னார்கள். மீண்டும், மீண்டும் கேட்ட போது, அது இறந்துவிட்டது..என்று சொன்னார்கள். எப்படி நடந்தது என்று, நான் அறிந்துகொள்வது ஒரு புறம் இருக்கட்டும்.. சீஸரை, அந்தக்கணத்தில், நான் காப்பாற்றத்தவறியதால்...நன்றி கெட்ட நாயாகவே என்னை உணர்கிறேன்.)
04-ஏப்ரல்-2012