Popular Posts

Sunday, April 15, 2012

அடீங்!

சீமான் வீட்டு நாய், சிம்மாசனம் ஏறுதுன்னு, அண்ணன் வீட்டு நாய் வெள்ளாவியில ஏறி விளையாடன கதையாய், நாமுளும் முன்னேறியாச்சு! நாடும் முன்னேறியாச்சு! நூறடி ரோடும், பத்து மாடி கட்டிடமுமா..ஜிகுஜிகு’னு சிட்டி மணக்குது! இப்பல்லாம், கிராமத்தான்’னு சொல்லிக்க ஒரு ஆளும் இல்லை!
காடு, கழனி, தோட்டம், தொரவுகளை கூறு போட்டுப்ளாட்டு போட்டு வித்தாச்சு விவசாயிகள்!
கட்டுகட்டாய் நோட்டுகளை எண்ணி, பாங்க்லேயும் போட்டாச்சு! குந்தி திங்க வட்டி பணம் வருது! அப்புறம் என்ன? மாட்டு வண்டியிலே போன பண்ணைமாருக.. டாட்டா சுமோவில்பவனி வர்ற அழகே தனி! இதெல்லாம் பார்த்தாக்க, ‘அடீங்..கொய்யாலே!என்பதின் முழு அர்த்தம் அப்பட்டமா விளங்குகிறது!
ரியல் எஸ்டேட்’ பிஸினெஸ்ஸாம்! டிவி பெட்டிலே, கொமரிப்பொண்ணு, நமக்கு சொல்லுது..’நாலே எட்டிலே ஏர்ஃபோர்ட்டாம்! மூணே எட்டிலே ரயில்வே ஸ்டேஷனாம்! நாலு ப்ளாட் வாங்கினா கமர்கட்’ ஃப்ரீயாம்!

பிளாஸ்டிக் மரம் வச்சு, தண்ணியே ஊத்தாம வளர்க்கிறாங்க பாவி பசங்க!
அட! அதை வுடுங்க! இங்கிலீஸ் ஸ்கூல்லேதான் குழந்தைக படிப்பே ஆரம்பிக்குது!
ஆட்டோகாரன்தான், குழந்தைகளை இஸ்துகுணு போறான்!
ஓரு ஆட்டோ’குள்ள ஒரு இருபது உருப்படிகள்!

‘ஹாய்! மம்மி!என்று டாட்டா காட்டிட்டு..அதுக போறத பார்த்து, பெத்தமனம் பித்தா போச்சு!
கவர்மெண்ட் பள்ளிக்கூடத்தில், தமிழ் வாத்தியார் இருக்காராம்! அங்கே படிச்சா.. அறிவே வராதாம்!
ஒத்த பிள்ளையை, பெத்துட்டு, இந்த இஸ்கூலுக்கா அனுப்புறது? என்று கடன் வாங்கி, டவுனுக்கு படிக்க அனுப்பி வைக்கும் மாத வருமான மானஸ்தர்கள்!
டீக்கடை ஆறுமகம், பொட்டிக்கடை பொன்னாத்தா வாரிசுகள், பாஸ்போர்ட் வாங்கி, அமெரிக்கா போய்விட்டார்கள்!

வளர்ச்சி அப்படி!
கள்ளு, பட்டைச்சாராயம் போன்ற அந்த கால சரக்குகள் அழிந்து, பெக்கார்டி, ஆர்ஸி என்று  நவீன பானங்கள், பலருக்கு அன்றாட சரக்குகள் ஆகிவிட்டன! உடம்புக்கு வேற நல்லதாம்! ..க்கும்!
ஏ.சிஇல்லாமல் எனக்கு தூக்கமே வரல!என்று, மகளிர் அழகு நிலையங்களில், ஆடு மேய்த்த  அருக்காணி அக்காக்களின் பேத்திகள், பேசிக்கொல்லும்(!) அழகே தனி!
சுடுகாட்டுக்கு தனியே போகத்தெரியாத, கருமம் பிடித்த அம்மா, அப்பாக்களை, மாமியார், மாமனார்களை, மாதா மாதம் ஒரு அமெண்ட்’டைக்கட்டி, பழைய டிவி/ஃபிரிட்ஜ் பொட்டிகளைபோல, முதியோர்கள் இல்லங்களில்  தள்ளி விட்டு, மல்டி நேஷனல் கம்பனியில், மாதம் பல லட்சங்களில் புரளும், படிச்ச அவலட்சணங்கள் பல!
டாப் ஸ்டூடன்ஸ்களாம்! க்ரீம் ஆஃப் த சொஸைட்டி!
அட! மைக்ரோ ஸாப்ட் பில் கேட்டே சொல்லிட்டாரே! பின்ன என்ன பண்ணறது? நம்பித்தொலைக்க வேண்டி இருக்கு!
மாருதி-800 காரில் போனாலே, மகா கேவலமாம்!
ஆய்-10 ஓரளவு பரவாயில்லையாம்!
இந்த புதுப்பணக்காரர்களின், உபத்தரம்,மூத்திரம் தாங்காமல், காலங்காலமாக, பணக்காரர்களாக இருந்தவர்கள், ஓபராய் ஹோட்டல், மெரிடன் என்று தங்கள் ஜாகைகளை, மாற்றிக்கொண்டு அலைகிறார்கள்!!
முக்குக்கு மூணு டாஸ்மாக் கடையை, கவர்மெண்டே திறந்து வைக்கிறது!
வருமானம் அப்படி!
மூக்குப்பிடிக்க குடிக்க, குடிமகன்கள், அதிகாலையிலே வந்திடாறங்களே!

அப்புறம், சினிமா!

“நான் குடிச்சா நல்லவன்டா! நாலு நாளா, பாத் ரூம் போனவண்டா!”-என்று ஓபனிங் ஸாங் எழுத (துட்டு கொடுத்தா..) கைரமொத்து இருக்க, பூமியை நாலு பீஸா.. ஒடைச்சு, தரைமேலே குதிச்சு வரும் ஹீரோ, படம் முழுதும் குத்துபாட்டுக்கு ஆடும் ஹீரோயின் கலையரசிகள்!
அப்புறம் டாப் டென்! சீரியல்! சுள்ளம்மா சமையல்!
மானும், மயிலும் மானங் கெட்டாட!
அட! போங்கப்பா! கண்ணைக்கட்டுது!
ஊடாலே, இந்தியாவின் ஜனத்தொகை வேறு கிர் கிர்என்று ஏறி, உலக நாட்டையே அதிர வைக்கின்றது!
மக்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள்! என்ற செய்தி நல்ல விஷயம்தானே!

பணம் புரளுது கழுதை மாதிரி!

அது கையிலே இல்லாதவன், கிழவி கழுத்தறுக்கலாமா? இல்லை, பாங்க் பொட்டி உடைக்கலாமா? என்று யோசிக்க ஆரம்பிச்சிட்டான்!
நாலு காசு கையில் இருந்தா, எங்கேயும் தனியா போக முடியல!
 போட்டுத்தள்ளிடறாங்க!
இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்! 
அப்படிச்சொன்னா...
“இந்த பெருசுக்கு வேற வேலையே இல்லை!”-இப்படி பகடி பண்ணிப்புடுவானுக..
அதனாலே..
’நாடு நாலு கால் பாய்ச்சலில் முன்னேறுது! நல்ல விஷயம்தான்!’ - சொல்லி முடிச்சுகிறேன்!
மனசுக்குள்ள மட்டும் யாருக்கும் கேட்காம சொல்லிக்கிறேன்..’அடீங்..கொய்யாலே!” !

-அன்புடன் திருநாவு.

Tuesday, April 3, 2012

நன்றி கெட்ட நாய்!



எனக்கும் அவனுக்கும் சுமார் மூன்று வருட  சிநேகிதம்.
எத்துனை ஜென்ம உறவு என்று தெரியாது..அவ்வளவு பாசப்பிணைப்பு.
என்னைப்பார்க்கும் பார்வையிலே, அன்பும் கருணையும் அவன் கண்களில் தெரியும்.
காலையில், என்னை ஆபிஸுக்கு அனுப்பி வைத்துவிட்டு எங்கு செல்வான் என்று தெரியாது. ஆனால், மாலையில் நான் பிரிட்ஜ் விளையாடும் கிளப்’பிற்கு சரியாக வந்து விடுவான்.
அங்கு எனது மோட்டார் சைக்கிளுக்கு அருகில் படுத்து கொண்டு, நான் வரும் வரை..காவல்!
ஒருவேளை, நான் அங்கு இல்லாவிட்டால், நான் எங்கு போயிருப்பேன் என்று யோசித்து...நீச்சல் குளம் தேடி வந்து விடுவான். அங்கும், எனது பைக் இல்லாவிட்டால், அலுவலகம் தேடி  வருவான்...
’உன்னைத்தேடிக்கொண்டு, சீஸர் வந்தாரப்பா!’  என்று நண்பர்கள் தகவல் தருவார்கள்.
சீஸருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஊரறிய ஆரம்பித்தது.

சீஸர் அந்த தெருவுக்கே..டான்’ -ஆக இருந்தான்.
அந்தத்தெருவில் இருந்த அத்தனை நாய்க்குட்டிகளுக்கும் அவன்தான் தகப்பன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
மற்ற நாய்களிடமும், சீஸரின் அணுகுமுறை சிறப்பானதாகவே இருந்தது.
-பொதுவாக சீஸர் இருக்கும்போது, மற்ற நாய்கள் சாப்பிடக்கூடாது! முடியாது!.
ஆனால், சீஸர், அந்த தெருவில் போடப்படும் உணவுகளை, முகர்ந்துபார்த்துவிட்டு, “சரி..நீயே சாப்பிடு!’ என்பது போல விட்டுவிடும். அதன் பிறகுதான், மற்ற நாய்கள் உணவருந்தும்.

அடுத்த தெரு, நாய்களுக்குக்கூட, சீஸரின் மீது மதிப்பும், மரியாதையும், பயமும் இருந்தது.

சீஸர் இருக்கும்போது, மற்ற நாய்கள், எனது பக்கம் பார்த்தாலே, சீஸர் சீறி விடும்!
சீஸர் மட்டுமே, என்னுடன் செல்லமும், உரிமையும் கொண்டாட வேண்டுமாம்!
நான், தவறிப்போய், மற்ற நாய்களை, தொட்டு தடவி, அன்பைக்காட்டினால் போதும்..சீஸர் முகம் வாடி வதங்கி விடும்!

 நான் இப்படி தெரு நாய்களிடம் அன்பு காட்டுவது கண்டு, சிலருக்கு அறுவெறுப்பு!
உயர் ரக நாய்களை, வளர்க்க ஃபீரியாகவே தரத்தயாராக இருந்தார்கள்.
’நாய், சுதந்திரத்தோடு, வாழ வேண்டும், வீட்டுக்குள் வைத்து, வாழாவெட்டியா அதை மாற்றி விடக்கூடாது’  என்று நான் நம்பியதால், வீட்டுக்குள் செல்ல நாய் வளர்ப்பதை நான் மறுத்தேன்.

ரொம்பவே உஷாராக இருக்கும் சீஸர், ஒரு நாள், ப்ளூ-கிராஸ் வேன் வரும் போது மாட்டிக்கொண்டது.

 “எங்கே சீஸரைக்காணவில்லையே?”- என்று நான் தேட ஆரம்பித்த போது, சீஸர், 
 ப்ளூ கிராஸ் கிராதகர்களிடம், மாட்டிக்கொண்ட கதையைச்சொன்னார்கள் நிஜமான விசனத்தோடு.

காஞ்சிபுரம் ப்ளு-கிராஸ் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு, கேட்ட போது, அதற்கு, குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்துபின், மீண்டும் அதே இடத்திற்கு, கொண்டுவந்து விட்டுவிடுவோம்..என்று தகவல் தந்தார்கள்.

அவர்கள் சொன்னதுபோலவே, ஒரு 20 நாட்கள் கழிந்து, சீஸர் திரும்பவும் வந்துவிட்டான்!
’பரவாயில்லையே..இந்த ப்ளு-க்ராஸ்!”- என்று மெச்சிக்கொண்டேன்.
ஆனால், அங்கு நடந்த கொடுமைகளை, என்னிடம் அவன் சொல்லி அழுதது எனக்கு மட்டும்தான் புரிந்தது. அனேகமாக, அந்த ஆப்ரேஷன் கஷ்டமான ஒன்று என்றே எண்ணுகிறேன்.

எனக்கும், சீஸருக்கும்மான புரிதல் விஷேஷமானது.
சீஸரில் பாஷை, எனக்கு புரிகிறது என்று சீஸர் நம்பினான்!
நான் பேசினால், கவனித்து, பதிலுக்கு அவனும் ஏதாவது சொல்லுவான்.


சீஸரின், பெண் நண்பர்கள், விஷயம் புரியாமல், சீஸரிடம் வந்து குடும்பம் நடத்த முயற்சி செய்தன. சீஸர், என்னிடம் வந்து சொல்லி அழுதான்.
“ஏதாவது செய்து..என்னை, மீண்டும் பழைய சீஸராக மாற்றிவிடு!’-என்று அவன் கேட்டது எனக்கு தெளிவாகவே புரிந்தது.
‘பரவாயில்ல..விடு!’-என்று ஆறுதல் மட்டும்தான் என்னால் சொல்ல முடிந்தது.
சீஸரின் கண் முன்னரே, அந்த பழைய நண்பிகள், சோரம் போனதை, சீசர் சகித்துக்கொள்ள வேண்டியதாகிற்று.
’சரி! இனி நம் வாழ்க்கை இப்படித்தான்....’ என்று, சீஸரும், கொஞ்ச நாட்களில் புரிந்து கொண்டான்.

கடந்த மாதம், காலை மணி பத்து என்று நினைக்கிறேன். ஒரு ஃபோன் வந்தது.
“ஸார்! உங்க சீஸரை..ப்ளு-கிராஸ் காரங்க பிடிச்சுட்டாங்க! வண்டியிலே ஏத்தறாங்க! சீக்கிரம் வாங்க!” -பதட்டத்தோடு ஒரு நண்பர் பேசினார்.
நானும், உடனே  அங்கு விரைந்தேன்.

நண்பர் சொன்னது உண்மைதான்.

சீஸர் கழுத்தில் கயிற்றை மாட்டி, ப்ளூ-க்ராஸ் வண்டிக்குள் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.
என்னைக்கண்டவுடன், சீஸருக்கு மேலும் நம்பிக்கை வந்து விட்டது.
ஆக்ரோஷத்தோடு போராடினான்.

“இந்த நாய்க்கு ஆப்ரேஷன் செய்து விட்டார்கள். காதைப்பாருங்க! அதற்கான அடையாளம் இருக்கின்றது.”-என்று நான் பதற..

“ஆமாங்க. யாரு இல்லைனாங்க. ஆப்ரேஷன் பண்ணியாச்சுதான். ஆனா..இதற்கு வியாதி பிடித்துள்ளது. அதற்கான, வைத்தியம் செயத பின்னர், மீண்டும் இதே இடத்தில், கொண்டு வந்து விட்டுவிடுவோம்.”- என்று அவர்கள் சொல்ல..

“நிச்சயம் கொண்டு வந்து விட்டுடுங்கோ!”-என்று நான் வேண்டிவிட்டு..
சீஸரைப்பார்த்தேன்.

“இப்படி விட்டுவிட்டாயே..நீ வந்துமா அவர்கள் என்னைப்பிடித்துச்செல்கிறார்கள்? அடச்சீ!”- என்று சீஸர் சொல்லவில்லை...

அது வழக்கம்போல நம்பிக்கையாகவே என்னைப்பார்த்தது.

‘சரி! வைத்தியம் முடிந்த பின், மீண்டும் விட்டுவிடுவார்கள்’-என்று நம்பி..சீஸருக்கு ‘டாட்டா’ செய்தேன் நான். மனதுக்குள் ஏதோ ஒரு உறுத்தல் மட்டும் இருந்தது.

ஆம்! அதற்கு பின்னர் சீஸர் வரவில்லை.

(பின்குறிப்பு: காஞ்சிபுரம் ப்ளூ-க்ராஸ்க்கு ஃபோன் மூலம் தகவல் கேட்ட போது, முதலில் மழுப்பலாக பதில் சொன்னார்கள். மீண்டும், மீண்டும் கேட்ட போது, அது இறந்துவிட்டது..என்று சொன்னார்கள். எப்படி நடந்தது என்று, நான் அறிந்துகொள்வது ஒரு புறம் இருக்கட்டும்.. சீஸரை, அந்தக்கணத்தில், நான் காப்பாற்றத்தவறியதால்...நன்றி கெட்ட நாயாகவே என்னை உணர்கிறேன்.)

04-ஏப்ரல்-2012