Popular Posts

Friday, August 30, 2013

ஒரு சிறுகதை தொகுப்பு எழுத ஆசை!



சிறுகதை-தொகுப்பு ஒன்று எழுதி, வெளியிட்டு வீதி வீதியாக விற்று, தெரு தெருவாக பிரபலமாகி பெரிய மனுஷனாக ஆக வேண்டும் என்கிற அரிப்பு கொஞ்ச நாளாகவே அதிகமாகிக்கொண்டு வருகிறது.
நெருங்கிய நண்பர்கள் சிலர் எனது முயற்சியை பாராட்டி இப்பொழுதிலிருந்தே ஊக்குவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அம்புட்டு பாசம்!
என்ன மாதிரி கவர் போடலாம்
யாரை வைத்து முகப்புரை எழுதலாம் என்றெல்லாம், நண்பர்கள் குழாம் சகிதம் ஒரு கு(பு)ட்டி மாநாடு போட்டு பலத்த ஆலோசனைகளும் செய்து, நான் அடுத்த கட்டத்தை நோக்கி முன் நகர ஆரம்பித்தேன்.
அதன் முதல்படியாக ஊட்டம்மாவின் ஊட்டமான ஆதரவு தேவையென்று, மனதுக்குள் வழக்கமான எச்சரிக்கை மணி அடித்ததால், என்-ப்ரிய சகியுடன், எனது புதிய முயற்சி பற்றி விவாதித்தேன்
நான் எப்பேர்பட்ட பலசாலி என்பதனை நன்கு அறிந்த அவர், “சரி! ஒரு பத்தாயிரம் ரூபாய் நாசம் செய்ய முடிவு செய்துவிட்டீர்கள் போலிருக்கு!” என்று மங்களகரமாக ஆரம்பித்து வைத்தார்.
ஆரம்பமே சரியில்லையே? என்று முனகியபடி
ஏன் என் புஸ்தகங்கள் விற்காதா? அவ்வளவு நஷ்டமா வரும்?” –அப்பாவியாக கேட்டேன்.
இருக்கிற குப்பைகளை அள்ளவே என்னால் முடியவில்லை! அதில் உங்கள் புஸ்தகங்களும் சேர்ந்து விடுமே?” –அதே அப்பாவித்தனத்தோடு அவர் சொல்ல..
ஓங்கி அறையலாம் என்று ஒரு எண்ணம் வந்தது. ஆனால் அதன் பின்விளைவுகள் ஞாபகத்திற்கு வந்து தொலைத்ததால், பிறகு பேசிக்கொள்ளலாம் என்று எண்ணி விஷயத்தை மூடி வைத்தேன்.


ஆனால் அவரோ விடுவதாக இல்லை.

உங்களுக்கு சுஜாதாவை தெரியுமா

“..ம்! தெரியுமே! ’அந்தமானைப்பாருங்கள் அழகு..’ இந்த பாட்டுக்கு சிவாஜியோடு அழகாக ஆடியவர்தானே?”

யோவ்! எழுத்தாளர் சுஜாதாவை தெரியுமா? அவர் கதைகளை படித்திருக்கிறார்களா?”

மரியாதை ஓவராக குறைகிறதை என்பதை கவனித்துக்கொண்டே நான், “ஓ! அவரா? அவர் ஓரளவுக்கு எழுதுவாரே! கொஞ்சம் படித்திருக்கேன்

ஓரளவுக்கா? இதிலிருந்தே உங்க லட்சணம் தெரிகிறது” – என்று முறைத்த கொண்ட அவர், அன்று இரவு முழுவதும் என்னிடம் பேசவேயில்லை.

அடுத்த நாளும் வழக்கம் போல அழுதுதான் விடிந்தது.
ஆனால் நான், விட்டத்தைப்பார்த்துக்கொண்டே இருந்ததை கவனித்த அவர், ‘இவன் பத்தாயிரம் ரூபாய்க்கு வேட்டு வைக்காமல் விட மாட்டான் போலிருக்குஎன்று புரிந்து கொண்டார் போலிருக்கு.

எனது கைகளில், ஒரு புஸ்தகத்தை திணித்த அவர், “முதலில் இதைப்படியுங்கள். அப்பொழுதுதான் உங்கள் எழுத்து லட்சணம் புரிய வரும்” – என்று சொல்லிவிட்டு அவரது வழக்கமான ஜாகையான சமையலறைக்கு சென்று விட்டார், அவரது படைப்பு திறனை காட்ட.


அந்த புத்தகம் ஒரு சிறுகதை தொகுப்பு
தலைப்பு : புத்தனாவது சுலபம்
எழுதியவர் : எஸ்.ராமகிருஷ்ணன்

இணையத்தில் இவர் பெயர் அடிக்கடி அடிபட்டு வந்ததை கவனித்து இருக்கிறேன்.
ஆனால் அவர் என்ன செய்கிறார் என்றெல்லாம் தெரியாது
தெரிந்துகொள்ள ஆர்வமும் கிடையாது.
எஸ்ரா என்பவர்தான், எஸ். ராமகிருஷ்ணன் என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன்.
சரி! படித்துத்தான் பார்ப்போமே’ன்று வாசிக்க ஆரம்பித்தேன்.
மனிதன், எழுதுவதில் எமகாதகன் போலிருக்கு.
மெல்லிய உணர்வுகளை, கதைகளாக்கி கண்முன்னே நடமாடும் மனிதர்களை நம்முள்ளே அழகாக செலுத்தி மனதில் ஆட்சி புரியவைக்கும் அளவிலான எழுத்து வன்மை! 
சொல் நயம்! கருத்து நயம்! அனுபவம் மிக்க அலசல்கள்!

அந்த சிறுகதை தொகுப்பை ஒரே மூச்சில் படித்து விட்டேன்.
அந்த பாதிப்பில் உணர்ச்சிவசப்பட்டு நான் மீண்டும் மோட்டு வளையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

..ம்! இந்த மாதிரி ஜாம்பவான்கள் சூழ் சிறுகதை உலகின் என்னால், பத்து நிமிஷம்கூட மூச்சு பிடிக்கமுடியாதே! முழுகிப்போய்விடுவேனே! என்றெல்லாம் பயம் என்னை ஆட்கொண்டு கொஞ்சம் காய்ச்சல்கூட அடிக்க ஆரம்பித்துவிட்டதை உணர்ந்தேன்..

“என்ன.. புஸ்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட்டீர்கள் போலிருக்கு. ..ம்! இப்ப சொல்லுங்க. நீங்களும் கதை எழுத போகிறீர்களா?’ – ராட்சஸி மாதிரி என்னை கேவலமாக பார்த்து, மனைவி கேட்டதும் என் தன்மான உணர்ச்சி விழித்துக்கொண்டது.

 ”ஓரளவு எழுதுகிறார். பரவாயில்ல..” –மழுப்பினேன்.

“இந்த லொல்லுக்கு கொறைச்சலில்லை. ஓரளவுக்கு எழுதுகிறாராம். என்ன அப்படி குறை கண்டீர்கள்?”

நானும் விடுவதாக இல்லை.

“இந்த புஸ்தகத்தில் பக்கம் எண்:25-ல், அருண் என்கிற மகன் எப்பொழுது பிறந்துள்ளதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்?”
என் மனைவி, சற்று ஆச்சரியத்துடன் நான் ஏதோ சொல்ல வருவதை புரிந்து கொண்டு, அந்த பக்கத்தைத்படித்து பார்த்து கொண்டு,..
“”ம்! அப்பாவுக்கு வயது 24 ஆகும்போது மகனுக்கு வயது ஒண்னரை ஆகிறது”

”சரி.. பக்கம் எண்:32 ல் அப்பாவின் வயது என்னவென்று குறிப்பிடுகிறார்?”

பக்கம் 32 படித்துவிட்டு, “அப்பாவின் வயது 51 என்கிறார்” என்றார் மனைவி.

“ஆக, எழுத்தாளர் கூற்றுப்படி, அருணுக்கு, அதாவது அவர் மகனுக்கு இப்போது என்ன வயது?”

”அவர் மகனுக்கு 28 முடித்து மேலும் அரை வருடமாகி இருக்க வேண்டும்”

“சரி! பக்கம் எண்:32-ல் மகன் வயது 24 என்று சொல்லியிருக்கிறாரே? இது தவறுதானே? அதனால்தான் ஓரளவுக்கு எழுதுகிறார் என்று சொன்னேன். இதிலென்ன தவறு?” –சற்று சத்தமாகவே கேட்டேன். சற்று நேரம் நான் நக்கீரனாக மாறிவிட்டதாகவே பட்டது.


கொஞ்சம் நேரம் அமைதியான மனைவி, “இதெல்லாம் ஒரு குற்றமா? கதைதானே முக்கியம். புள்ளி விவரம் எழுத அவரென்ன ஆடிட்டரா? “ என்று ஒரு ஸ்டெரைக்ட் பேட்’டை வைத்து நான் வீசிய பந்தை டிஃப்ன்ஸ் ஆடி, என் கைக்கே அதை தள்ளி விட்டார்.

இருந்தாலும் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு,
”சரி விடு! நான் புஸ்தகம் எழுதல. சந்தோஷம்தானே? – என்றேன்.

”ரொம்ப சந்தோஷம்! தமிழ் பிழைத்தது! ஆனா பாருங்க, புஸ்தகம் போடாமலே நமக்கு பத்தாயிரம் ரூவா லாபம்!” என்றார் என் மனைவி பூரிப்புடன்.

இதென்ன கணக்கு என்று எனக்கு புரியவில்லை.

”....ஙே! எஸ்ரா தான் விளக்கவேண்டும்!”

-அன்புடன் திருநாவு 

Monday, August 12, 2013

அமரர் வாலி அவர்களின் நினைவில், பா. விஜய் வடித்த கண்ணீர் கவிதாஞ்சலி



சிகரம் போலுயர்ந்தும்
நாங்கள் கைத்தொடும் தூரமிறங்கிய அடிவாரமே!
அவதார காவியத்தின் அவதாரமே!
நுண்மான் நுழைப்புலம் நுகர்த்த சீர் நீ!
தமிழ்ப்பால் தடையறச் சுரந்த மார் நீ!
அவணி நெடுக-எழுத்தால் அடைமழை பெய்வித்த கார் நீ!
ஒருவரல்ல அய்யன்மீர்-நீர் ஒருவன் எனும் ஒருமைக்குள் ஆயிரம் புலவராய் வாழ்ந்த ஊர் நீ!
அமிர்தம் மட்டுமல்ல வெய்யிலில் கருத்த உழைப்பாளியின் நாவறட்சிக்கு ஈந்த நற்றமிழ் மோர் நீ!
அனிச்சம் போல் மடல்விடும் அடுத்த தலைமுறை கவிஞர்களின் வேர் நீ!
யார் தெரியுமா கவிஞர்களின் தலைவா நீ!
புடவைக் கட்டியது போதுமென்று வேட்டி கட்டி வாழ்ந்த கலைவாணி!
"நேற்றிரவு சுவாசம்-மிக மோசம்"
இது நீ மரணப் படுக்கையில் யாத்த கடைசி சாசனம்!
அது எப்படி அய்யா ஆவி தீரும் அந்தகாரத்திலும் எதுகையும் மோனையும் உன்னுள் ஆகிக்கொண்டிருக்கிறது பாசனம்?
காலப் பேழைக்குள் கடு மருந்து பூச்சுப் பூசி உன் பூதவுடலையும் வைத்திருக்கலாம் அழுகாது!
வைத்திருந்தால்-உன் விழி முடங்கி கிடந்திருக்கும்
விரல் மடங்கி கிடந்திருக்குமா எழுதாது
ஆன்மீகம் உன் அரண்!
ஹரனைச் சேவித்த வரனே உன்னுள் எத்தனை அழகிய முரண்?
அழகிய முரண்?
வைஷ்ணவத் திலகம்-உன் சிந்தைச் சிகையைச் சுற்றி சிலிர்ப்பிப் பார்த்தால்-அதில் பெரியாரின் கலகம்!
எம்.ஜி.ஆரின் பாட்டுப் படைக்கு நீதான் நிரந்தர தளபதி!
கலைஞரின் கவிரங்கில் நீ கணபதி!
ஆச்சார அனுஷ்டானம் நோக்காது நோன்பு நீ நோற்றதில்லை - ஆனாலும் அயிரை மீன் குழம்பிடம் - உன் அடிநாவு என்றுமே தோற்றதில்லை!
யாதெனச் சொல்லுவேம்-உனை தமிழ் நாதெனச் சொல்லுவேன்
யாப்புக்குள் மூழ்கி குற்றியலிகரம் கொத்தி கட்டளை கலித்துறையும் மிளிற்றும் உன்பேனா?
ஷாப்புக்குள்ளும் மூழ்கி டிவிட்டரில் சொல்பொறுக்கி திரைக்கும் பாட்டியற்றும் ஐ-டியூனா?
காவிரி-உந்தூள் மலர்சூழ களிநடைப் புரிந்தர திருவரங்கம்-உன் கருவரங்கம் ஆழிமேல் அனந்தசயனமிடும் அரங்கராஜன் குடைநிழலில் அரங்கநாதனாய் நடந்தாய்!
இன்று கோடம்பாக்க கோபுரத்தில் குலவிளக்காய்க் கலந்தாய்!
மனசொப்பக் கண்டால்-நீ நியூரான்ஸ் எல்லாம் நித்தம் இளமைச் சொரிய புதுப்புது சொல் கண்டெடுக்கும் நியூட்டன்!
வயசொப்பக் கண்டால் வாலிபக் கவியே!
நீ பாட்டுப் பேரன்களுக்கெல்லாம் பாட்டன்
அகவையில் தான் நீ எண்பத்திரெண்டு!
ஆனால் கொஞ்சிச் சிரித்துப் பேசும் எண்ணத்தில் ரெண்டு' நீரே முற்பிறவியில் ஏழிசைத் தாண்டி தாழிசைக் கண்ட திருநாவுக்கரசர்!
இப்பிறவியில் சொன்ன சொல் பொய்க்காது கொடுத்த வாக்குத் தவறாது-வாழ்ந்த ஒருநாவுக்கு அரசர்!
கையும் மலரடியும் கண்ணும் கனிவாயும் உண்ணும் தீ எனத் தெரிந்தும் விட்டுவந்தோம்!
தமிழா-இதுவரை நீ வாசித்த கவிதையை தீ வாசிக்கட்டும் என்று-இன்று! பிரபஞ்சமே பிரமிக்கிறது,
பேராசானே! பதினைந்தாயிரம் பாடல் எனும் கணக்கைக் கேட்டு!
ஓ! இறைவா-எமது தமிழ்ப்பெருங் கவிஞன்-உனை நேரில் பாட வந்துவிட்டான் அந்த அமர ஜோதி அமர-உன் அகத்தின் அருகாமையில் ஓர் இடத்தைக் காட்டு!

-பா.விஜய்