சிறுகதை-தொகுப்பு ஒன்று எழுதி,
வெளியிட்டு வீதி வீதியாக விற்று, தெரு தெருவாக பிரபலமாகி பெரிய மனுஷனாக ஆக வேண்டும்
என்கிற அரிப்பு கொஞ்ச நாளாகவே அதிகமாகிக்கொண்டு வருகிறது.
நெருங்கிய நண்பர்கள் சிலர் எனது முயற்சியை பாராட்டி
இப்பொழுதிலிருந்தே ஊக்குவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அம்புட்டு பாசம்!
என்ன மாதிரி கவர் போடலாம்?
யாரை வைத்து முகப்புரை எழுதலாம் என்றெல்லாம், நண்பர்கள் குழாம் சகிதம் ஒரு கு(பு)ட்டி மாநாடு போட்டு பலத்த
ஆலோசனைகளும் செய்து, நான்
அடுத்த கட்டத்தை நோக்கி முன் நகர ஆரம்பித்தேன்.
அதன் முதல்படியாக ஊட்டம்மாவின் ஊட்டமான ஆதரவு தேவையென்று,
மனதுக்குள் வழக்கமான எச்சரிக்கை மணி அடித்ததால்,
என்-ப்ரிய சகியுடன்,
எனது புதிய முயற்சி பற்றி
விவாதித்தேன்.
நான் எப்பேர்பட்ட பலசாலி என்பதனை நன்கு அறிந்த அவர், “சரி! ஒரு பத்தாயிரம் ரூபாய் நாசம் செய்ய முடிவு செய்துவிட்டீர்கள் போலிருக்கு!” என்று மங்களகரமாக ஆரம்பித்து வைத்தார்.
ஆரம்பமே சரியில்லையே? என்று முனகியபடி
“ஏன் என் புஸ்தகங்கள்
விற்காதா? அவ்வளவு நஷ்டமா வரும்?” –அப்பாவியாக கேட்டேன்.
”இருக்கிற குப்பைகளை
அள்ளவே என்னால் முடியவில்லை! அதில் உங்கள் புஸ்தகங்களும் சேர்ந்து விடுமே?”
–அதே அப்பாவித்தனத்தோடு அவர் சொல்ல..
ஓங்கி அறையலாம் என்று ஒரு எண்ணம் வந்தது. ஆனால் அதன் பின்விளைவுகள் ஞாபகத்திற்கு வந்து தொலைத்ததால், பிறகு பேசிக்கொள்ளலாம் என்று எண்ணி விஷயத்தை மூடி வைத்தேன்.
ஆனால் அவரோ விடுவதாக இல்லை.
“உங்களுக்கு சுஜாதாவை
தெரியுமா?
“..ம்! தெரியுமே! ’அந்தமானைப்பாருங்கள் அழகு..’ இந்த பாட்டுக்கு சிவாஜியோடு அழகாக ஆடியவர்தானே?”
“யோவ்! எழுத்தாளர் சுஜாதாவை தெரியுமா?
அவர் கதைகளை படித்திருக்கிறார்களா?”
மரியாதை ஓவராக குறைகிறதை என்பதை கவனித்துக்கொண்டே நான், “ஓ! அவரா? அவர் ஓரளவுக்கு எழுதுவாரே! கொஞ்சம் படித்திருக்கேன்”
“ஓரளவுக்கா? இதிலிருந்தே உங்க லட்சணம் தெரிகிறது” – என்று முறைத்த கொண்ட அவர்,
அன்று இரவு முழுவதும் என்னிடம் பேசவேயில்லை.
அடுத்த நாளும் வழக்கம் போல அழுதுதான் விடிந்தது.
ஆனால் நான், விட்டத்தைப்பார்த்துக்கொண்டே இருந்ததை கவனித்த அவர்,
‘இவன் பத்தாயிரம் ரூபாய்க்கு வேட்டு வைக்காமல் விட மாட்டான்
போலிருக்கு’ என்று புரிந்து கொண்டார்
போலிருக்கு.
எனது கைகளில், ஒரு புஸ்தகத்தை திணித்த அவர், “முதலில் இதைப்படியுங்கள். அப்பொழுதுதான் உங்கள் எழுத்து லட்சணம் புரிய வரும்”
– என்று சொல்லிவிட்டு அவரது வழக்கமான ஜாகையான சமையலறைக்கு
சென்று விட்டார், அவரது படைப்பு திறனை
காட்ட.
அந்த புத்தகம் ஒரு சிறுகதை தொகுப்பு
தலைப்பு : புத்தனாவது சுலபம்
எழுதியவர் : எஸ்.ராமகிருஷ்ணன்
இணையத்தில் இவர் பெயர் அடிக்கடி அடிபட்டு வந்ததை கவனித்து
இருக்கிறேன்.
ஆனால் அவர் என்ன செய்கிறார் என்றெல்லாம் தெரியாது.
தெரிந்துகொள்ள ஆர்வமும் கிடையாது.
’எஸ்ரா’ என்பவர்தான், எஸ். ராமகிருஷ்ணன் என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன்.
சரி! படித்துத்தான் பார்ப்போமே’ன்று வாசிக்க ஆரம்பித்தேன்.
மனிதன், எழுதுவதில் எமகாதகன் போலிருக்கு.
மெல்லிய உணர்வுகளை, கதைகளாக்கி கண்முன்னே நடமாடும் மனிதர்களை
நம்முள்ளே அழகாக செலுத்தி மனதில் ஆட்சி புரியவைக்கும் அளவிலான எழுத்து வன்மை!
சொல்
நயம்! கருத்து நயம்! அனுபவம் மிக்க அலசல்கள்!
அந்த சிறுகதை தொகுப்பை ஒரே மூச்சில் படித்து விட்டேன்.
அந்த பாதிப்பில் உணர்ச்சிவசப்பட்டு நான் மீண்டும் மோட்டு
வளையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
..ம்! இந்த மாதிரி ஜாம்பவான்கள் சூழ் சிறுகதை உலகின் என்னால்,
பத்து நிமிஷம்கூட மூச்சு பிடிக்கமுடியாதே! முழுகிப்போய்விடுவேனே! என்றெல்லாம் பயம்
என்னை ஆட்கொண்டு கொஞ்சம் காய்ச்சல்கூட அடிக்க ஆரம்பித்துவிட்டதை உணர்ந்தேன்..
“என்ன.. புஸ்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட்டீர்கள் போலிருக்கு.
..ம்! இப்ப சொல்லுங்க. நீங்களும் கதை எழுத போகிறீர்களா?’ – ராட்சஸி மாதிரி என்னை கேவலமாக
பார்த்து, மனைவி கேட்டதும் என் தன்மான உணர்ச்சி விழித்துக்கொண்டது.
”ஓரளவு எழுதுகிறார்.
பரவாயில்ல..” –மழுப்பினேன்.
“இந்த லொல்லுக்கு கொறைச்சலில்லை. ஓரளவுக்கு எழுதுகிறாராம்.
என்ன அப்படி குறை கண்டீர்கள்?”
நானும் விடுவதாக இல்லை.
“இந்த புஸ்தகத்தில் பக்கம் எண்:25-ல், அருண் என்கிற மகன்
எப்பொழுது பிறந்துள்ளதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்?”
என் மனைவி, சற்று ஆச்சரியத்துடன் நான் ஏதோ சொல்ல வருவதை புரிந்து
கொண்டு, அந்த பக்கத்தைத்படித்து பார்த்து கொண்டு,..
“”ம்! அப்பாவுக்கு வயது 24 ஆகும்போது மகனுக்கு வயது ஒண்னரை
ஆகிறது”
”சரி.. பக்கம் எண்:32 ல் அப்பாவின் வயது என்னவென்று குறிப்பிடுகிறார்?”
பக்கம் 32 படித்துவிட்டு, “அப்பாவின் வயது 51 என்கிறார்”
என்றார் மனைவி.
“ஆக, எழுத்தாளர் கூற்றுப்படி, அருணுக்கு, அதாவது அவர் மகனுக்கு
இப்போது என்ன வயது?”
”அவர் மகனுக்கு 28 முடித்து மேலும் அரை வருடமாகி இருக்க வேண்டும்”
“சரி! பக்கம் எண்:32-ல் மகன் வயது 24 என்று சொல்லியிருக்கிறாரே?
இது தவறுதானே? அதனால்தான் ஓரளவுக்கு எழுதுகிறார் என்று சொன்னேன். இதிலென்ன தவறு?”
–சற்று சத்தமாகவே கேட்டேன். சற்று நேரம் நான் நக்கீரனாக மாறிவிட்டதாகவே பட்டது.
கொஞ்சம் நேரம் அமைதியான மனைவி, “இதெல்லாம் ஒரு குற்றமா? கதைதானே
முக்கியம். புள்ளி விவரம் எழுத அவரென்ன ஆடிட்டரா? “ என்று ஒரு ஸ்டெரைக்ட் பேட்’டை வைத்து
நான் வீசிய பந்தை டிஃப்ன்ஸ் ஆடி, என் கைக்கே அதை தள்ளி விட்டார்.
இருந்தாலும் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு,
”சரி விடு! நான் புஸ்தகம் எழுதல. சந்தோஷம்தானே? – என்றேன்.
”ரொம்ப சந்தோஷம்! தமிழ் பிழைத்தது! ஆனா பாருங்க, புஸ்தகம் போடாமலே
நமக்கு பத்தாயிரம் ரூவா லாபம்!” என்றார் என் மனைவி பூரிப்புடன்.
இதென்ன கணக்கு என்று எனக்கு புரியவில்லை.
”....ஙே! எஸ்ரா தான் விளக்கவேண்டும்!”
-அன்புடன் திருநாவு
No comments:
Post a Comment