Popular Posts

Friday, June 28, 2013

எனது நிலவு! - டிவிட்டுகள்


 


 !

பூமியை வேவு பார்த்தது, மேகத்துக்குள் முகம் மறைத்த ஒற்றன் நிலவு!

என்ன ஊடலோ?  பூமியின் சுடுசொல்லை தாங்காமல் சுருண்டது தேய்பிறை நிலவு!

மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது பூமி! ‘அப்படி வா என் வழிக்கு!” - என்றது முகம் மலர்ந்த வளர்பிறை நிலவு


பூமியில் நிகழ்ந்தன பல சுயம்வரங்கள்! பளிச்’சென்று முகம் துடைத்து தானும் பங்கேற்றது பவுர்ணர்மி நிலவு!

பூமியின் செய்கைகள் கண்டு, கடுங்கோபம் கொண்டு முகம் சுருங்கியது அமாவாசை நிலவு!

கண்ணடித்து பொறுக்கித்தனம் செய்யும் நட்சித்திரகும்பலைக்கண்டு, நடுங்கி மேகத்துக்குள் மறைந்தது அழகுச்சிறுக்கி நிலவு!

கட்சி மாறத்தெரியாமல், தன்னந்தனியே திரிந்தது சுயேச்சை நிலவு!

அன்புடன்
திருநாவு


 

Tuesday, June 18, 2013

நிதீஷின் சரித்திர சரிவு!


பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், பாரதிய ஜனதா கட்சியுடன், தன் கட்சி கொண்டிருந்த பதினேழு வருட உறவை முறித்துக்கொண்டு வெளியேறி விட்டார்!


இது ஒரு சரித்திர முடிவு! ஆகவே, நாமும் நமது கருத்தை பதிந்து கொள்வது சரித்திர அவசியமாகிறது!


சரத் யாதவ் மற்றும் நிதீஷ் சொல்லும் காரணங்களை அலசிப்பார்த்தால், நம் தலைதான் கரணம் அடிக்கின்றது!


குஜராத் மோடியை பிடிக்கவில்லை!


அதுவும் அவர் பிரதமராக வருவதைக்கொஞ்சம் கூட பொறுத்துக்கொள்ள முடியாது!


ஆனால், அத்வானி வரலாம்!


தம்பி வரக்கூடாது! அண்ணன் மட்டும் என் வீட்டுக்கு வரலாம் என்றால், அவர்களுக்குள் பேதம் வராதா?


சரி! நிதீஷின் முடிவில், என்ன தர்க்கம் இருக்கிறது?


மதவாதம் மீண்டும் வந்துவிடக்கூடாது என்ற ஆதங்கம்!


அத்வானி வந்தால், மதவாதம் மலராது.


மோடி வந்தால் மதவாதம் கோரத்தாண்டவம் ஆடும்!


இதுதான் அவரது வாதம்!


அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது.


ஓட்டு வங்கி அரசியல்தான் இவர்களை இயக்கிக்கொண்டிருக்கின்றது என்பதைக்கண்டு பிடிக்க, மிகப்பிரமாதமான அரசியல் அறிவு தேவையில்லை!


சரி! இனி இவர் என்னதான் செய்யப்போகிறார்?


ஜெயப்பிரகாஷ் நாரயணன் போல் தன்னை மாற்றிக்கொண்டு,


மூன்றாம் அணி அமைத்து, பிரதமராகலாம்!


அல்லது


காங்கிரஸோடு கைசேர்த்துக்கொண்டு, அரசியல் பாதையை வேறு திசை நோக்கி செலுத்தலாம்!


மொத்த்த்தில், ஒரு இழவும் புரியவில்லை!


ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்!


நிதீஷின் கைங்கரியத்தில்


லல்லு பிரசாத் யாதவ் மீண்டும் உற்சாகம் பெற்று விட்டார்!


காங்கிரசால் தனது புன்னகையை மறைக்க இயலவில்லை!


அன்புடன்,


திருநாவு


18-06-2013


 

'கிருஷ்ணவேணி முறுக்குப்பிழிந்து கொண்டிருந்தாள்!’


'கிருஷ்ணவேணி முறுக்குப்பிழிந்து கொண்டிருந்தாள்!’


ஒரு சிறுகதை எழுதலாம் என்று எண்ணி இப்படி எக்குத்தப்பாக ஆரம்பித்து விட்டேன்.


இனி எப்படி கதையைக்கொண்டு போவது?


முறுக்கு பிழிந்துகொண்டிருப்பதெல்லாம் ஒரு ஆரம்பமா? என்று யாரும் அலுத்துக்கொள்ள வேண்டாம்!


கிருஷ்ண வேணி, பதினெட்டைத்தொட்டு கொண்டிருக்கும் அழகுப்பதுமை


இப்படி அடுத்த வரிகளில் எழுதினால், இந்தக்கதையை படிக்காமலா போய் விடுவீர்கள்?


அந்த அழகு ராட்சஸி முறுக்கு பிழிவதை, மசாலா-வடைக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த, ரங்கசாமி, ஆசையோடு பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்!


..ம்! சிறுகதை என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்!


ஆனால், இது ஒரு உண்மைக்கதை!


கிருஷ்ண வேணிக்கு வயது அறுபது! வறுமை வறுத்தெடுத்த வடிவு!


சுருக்கங்கள் சொந்தம் கொண்டாடும் தளர்ந்த முகம்!


ரங்கசாமிதான் அவளின் கணவன்!


தள்ளு வண்டி வியாபாரம்தான், அவர்கள், வாழ்க்கையைத்தள்ளி கொண்டிருக்கின்றது!


முறுக்கு-மாவுக்கு, உப்பு, காரம் சரியாக போட்டாளா? இல்லை மறந்து விட்டாளா? என்கிற

 கவலையோடுதான், வடைக்கு மாவாட்டிக்கொண்டிருந்த ரங்கசாமி, கிருஷ்ணவேணியை

 பார்த்துக்கொண்டிருந்தான்.


இனிமேல்  இந்தக்கதையை நீங்கள் தொடர்ந்து படிக்க மாட்டீர்கள் என்று தெரியும்!


ஆகவே மேலே எழுதி என்ன புண்ணியம்?


மீண்டும் சந்திப்போம்!


அன்புடன்,


திருநாவு


18-06-2013