Popular Posts

Saturday, December 13, 2014

அமிச்சி!

அமிச்சி!
அம்மாவின் அம்மாவை எங்களூர் வழக்கப்படி அப்படித்தான் அழைப்பார்கள்.
மகள் வயிற்று பேரன்களில் நானும் ஒருவன்! கொடுத்த வைத்த கிழவி அவள்!
எத்துணை பேரன்கள்! பேத்திகள்! அந்த காலம் அப்படி! இப்போது இருக்கும் அமிச்சிகளுக்கு ஒரு பேரன் அல்லது பேத்தியை காணுவதற்கே அல்லது பேணுவதற்கோ பெரும்பாடாய் இருக்க.. அவருக்கோ அந்த தெரு முழுவதுமே பேரன்கள் பேத்திகள் மயம்தான்! கோவையில் விளாங்குறிச்சி எனப்படும் அழகிய குக்-கிராமம். இன்று நகரச்சாயல் விழுந்து, வெளிறி தன் கிராமிய மணத்தை தொலைத்து, இயல் வனப்பை இழந்து அநாதையாகி, பரட்டையாய் இருப்பதாகவே அங்கு செல்லும்போதெல்லாம் உணர்கிறேன். பீளமேடு-அன்னூர் இணைப்புச்சாலை கிராமத்திற்குள் கோடு போட்டு அழித்துவிட்டது.
சும்மா கிடந்த விளையாத நிலங்கள்கூடகோடிகளுக்கு விலைபோய்விட்டன.
விவசாயம் பார்த்துக்கொண்டிருந்த கவுண்டர் குடும்பங்கள் வங்கிகளில் வட்டி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றன. நெசவு தவிர வேறு தொழில் அறியாத முதலியார்கள் மெல்ல மெல்ல தங்களது அடையாளங்களை இழந்துவிட்டார்கள். பாவு போட்டு நூலைப்பதம் பார்க்கும் பாவடி எனப்படும் இடம் கூட பொட்டு வைக்காத நெற்றி போல பார்க்க பார்க்க பரிதாபமாக இருந்தது. கோலிக்குண்டு, பம்பரம் என விளையாடிய தெருக்கள், சிமெண்ட் ரோடுகளாக மாறு வேஷம் போட்டுகொண்டு எதையும் சொல்ல முடியாமல் வாய் பூட்டு போட்டுக்கொண்டு மூச்சு திணறிக்கொண்டிருந்தன. சொத்துகாரன்கூட கோவணம் கட்டி வாழ்ந்த கதை போய், ஒவ்வொரு தெருக்கோடியிலும் கோடி ரூவாயில் வீட்டைக்கட்டிவிட்டு உள்ளே தனியாக வாழும் கோமாளி நகரமாக இன்று மாறிவிட்டது. ஷிப்ட் கார் இரண்டு வாங்கியுள்ளேன் என்று பெருமையாக பேசும் சிலரை பார்க்கும்போது, மகிழ்ச்சியும் வரவில்லை. பொறாமையும் வரவில்லை. இந்த வளர்ச்சி சற்று அயர்ச்சியைத்தான் தருகின்றது. கிராமத்திற்கே உரித்தான பல அடையாளங்களை இழந்து ஏதோ சேற்றில் விழுந்த கிழட்டு யானையைப்போல தோற்றம் அளிக்கிறது அந்த கிராமம்.

முதலியார் வழவு! அந்த தெருவின் முதல் வீடு எங்களுடையது!
முதலியார் வழவுக்குள்  யார் வந்தாலும் எங்கள் வீட்டை கடந்துதான் செல்ல வேண்டும். சொந்தக்காரர்கள் போகும்போதே எதற்கு வருகிறார்கள்? ஏன் வருகிறார்கள்? என்கிற தகவலை ஆத்தா (அப்பாவின் அம்மா) பெற்று விடுவார்.  அப்படியும் நழுவி விட்டால், அவர்கள் திரும்பிவரும்போது தப்பிக்க முடியாது! மடக்கி செய்திகளை கறந்துவிடுவார்!

பொடக்காலி (புழக்கடை என்பதன் வழக்குச்சொல்) என்று அழைப்பார்கள். அது என்ன? எல்லார் வீட்டிலும்தான் பொடக்காலி இருக்கிறது. நம் வீட்டை மட்டும் இப்படி அடையாளப்படுத்தியிருக்கிறார்களே? என்று கேட்டதுண்டு.
பிரமாண்டமாக இருந்த பெரிய வீடு, சொத்து பிரிவுக்கு உள்ளான போது பொடக்காலி மனையை தாத்தாவுக்கு தந்து விட்டதால், அன்றிலிருந்து அந்த வீட்டை பொடக்காலி வீடு என்று பெயர் பெற்றதாம்! கள்ளும், கறியும். வேலும், வீர வாளும் அந்த வீட்டிற்கு அந்த காலத்து அடையாளங்களாம்!
தாத்தாவிடம் நாட்டு துப்பாக்கிகூட இருந்ததாக ஆத்தா பயந்து கொண்டே கூறியள்ளார்! அது வரலாறு!

மெல்லியதான தேகம். சிவந்த நிறம். முத்துப்போன்ற அழகான உறுதியான பற்கள்! அயராத உழைப்பு! சிக்கனம்! என் அமிச்சியின் அடையாளங்கள்!
அப்புச்சியைப்பற்றி அதிக நினைவுகள் இல்லை. அவர் இறந்த போது அங்கே கூடியிருந்த கூட்டம் நிழலாக மனதில் இருக்கின்றது. அளவுக்கு மீறிய சொத்துக்கள் இருந்ததால் அவரை அடக்கம் செய்யக்கூட மகன்களுக்கு நேரமில்லை. சொத்து சண்டைகளில் பிஸியாக இருந்தார்களாம். என் அப்பாதான், முன்னின்று நல்லவழி செய்ததாக அமிச்சி சொல்லிருக்கிறார்.
பச்சை நிறத்தில் புடவை கட்டியிருந்த என் அமிச்சிக்கு வெள்ளை நிறத்தில் புடவை மாற்றி விட்டிருந்தார்கள்.
தாலியை அறுத்துவிட்டார்கள். பொட்டு அழிக்கப்பட்டிருந்தது.
அந்த அமங்கல கோலத்தில் அமிச்சியை பார்த்த போது  நான்கு வயது சிறுவனான என் மனதில் அந்த காட்சி அழுத்தமாக மனதில் பதிந்துவிட்டது.

என் வீட்டிற்கும் அமிச்சி வீட்டிற்கும் கூப்பிடு தூரம்தான்.
வீட்டில் சதா தறி ஓடிக்கொண்டிருக்கும் இரைச்சல் இருந்துகொண்டே இருக்கும். இடமும் வசதிப்படாது. ஆகவே உறங்குவதற்கு மட்டும் அமிச்சி வீட்டிற்கு ஓடி வந்து விடுவேன்.
கருப்பாயி புருஷன் என்று செல்லமாக அமிச்சி என்னை விளிக்கும்போது  ஒரு வெட்கம் கலந்த கோபம் வரும். டவுஸர் கூட சரியாக போடத்தெரியாத என்னை புருஷன் என்று அழைத்தால் கோபம் வராதா என்ன? இருந்தாலும் அமிச்சி எங்கு சென்றாலும் உடன் ஒட்டிச்செல்லும் அங்கமானேன்.
மாலை நேரங்களில் தினமும் அங்காளம்மன் கோயிலுக்கு அழைத்துச்செல்வார். அங்கு தொப்பை போட்ட ஒரு செட்டியார் ராமாயணம் படிப்பார். கம்பீரமான ராமர் படம் எனக்கு அறிமுகமானது அந்த வயதில்தான். ராமாயணத்தில் ஏதோ ஒரு பகுதியை மட்டும் படிப்பார்கள். முடித்த பின்னர் வந்தவர்களுக்கு பிரசாதமாக சிறிது மண்-சர்க்கரை தருவார்கள். அதற்காகவே அங்கு செல்லும் சிறுவர்களும் உண்டு. அமிச்சியோடு நான் கழித்த அந்த குழந்தை பருவம்  இன்றும் அந்த மண்-சர்க்கரையாய் கரைந்து இனிமையான நினைவுகளாய் தேங்கிவிட்டன.

நான் பார்த்த முதல் சினிமா எதுவென்று நினைவில்லை. ஆனால் அமிச்சியின் கரங்களை பிடித்துக்கொண்டு என் அப்பாவின் எதிர்ப்பை மீறி நான் பார்த்த “அடிமை பெண்” படம் மறக்கமுடியாது.
காளப்பட்டியில்தான் டெண்ட் கொட்டகை. வீட்டிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரமிருக்கும்.
தமிழக அரசின் பரிசு பெற்ற படம் என்று ஒற்றை மாடு பூட்டிய கூண்டு வண்டியில் துண்டு பிரசுரம் வீசிச்சென்றார்கள். அதுதான் அந்த காலத்து விளம்பரம்!  குனிந்த உருவமாக எம்ஜிஆர் பட போஸ்டர்!
அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று என் மனதிற்குள் கொழுந்துவிட்டு எரிந்தது ஆசை.
சைக்கிளில் அப்பா வந்து கொண்டிருந்தார். ஆசையுடன் ஓடிச்சென்று ‘அப்பா! இந்த படம் அரசு பரிசு பெற்ற படமாம்! பார்க்கணும். காசு தாங்க!’-என்று கேட்டேன். அதற்கு முன்னர் சினிமாவுக்காக அப்பாவை இம்சித்ததில்லை. ஆகவே அவர் ‘சரி! போய் வா!” என்று சொல்வார் என்றுதான் எதிர்பார்த்தேன்.
அப்பா அந்த சமயத்தில் காங்கிரஸ் அபிமானி என்று எனக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான். ”ஒழுங்கா போய்ப்படி!”-என்று மறுத்துவிட்டார். அடக்க முடியாத கண்ணீரோடு என் அமிச்சி வீட்டிற்கு அழுது கொண்டே போனேன்.
நடந்த விஷயங்களை கேட்டு அறிந்து கொண்ட அமிச்சி, “அவன் கிடக்கிறான். நான் உன்னை கூட்டிட்டுபோறேன்” -என்று ஆறுதலாக சொன்னார்.
சிறு வயது என்றாலும் எதையும் நான் அமிச்சியிடம் கேட்டுப்பெற்றதில்லை.
ஏதாவது திண்பண்டங்களை கொடுத்தால்கூட ஏற்க மறுத்து விடுவேன்.
பேரனகளில் நான் ஒருத்தன் தான் அப்படி ரோஷம் காட்டுவேன்.
மணக்க மணக்க வடை சுட்டு வைத்திருப்பார். எனக்கு இணையான பிற பேரன் பேத்திகளுக்கு தருவார். எனக்கும் தருவார். நான் மட்டும் மறுத்துவிடுவேன்.
கருப்பாயி புருஷனுக்கு ரோஷம் ஜாஸ்தி-என்று திட்டுவார்.
அப்படிப்பட்ட நான் அழுதுகொண்டு அந்த சினிமாவை பார்க்க வேண்டுமென்று கேட்ட போதே அவர் முடிவு செய்துவிட்டார் போலும்.
அன்றே நான் என் அமிச்சியின் விரல்களை பிடித்துக்கொண்டு காளப்பட்டி டெண்ட் தியேட்டரை நோக்கி கம்பீரமாக நடந்த அந்த நாள் இன்று பசுமையாக உள்ளது.
அப்படி நாங்கள் போய்க்கொண்டிருந்தபோது அப்பா கவனித்துவிட்டார். பயந்துகொண்டே அமிச்சியின் கரங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டேன்.
அமிச்சி, அப்பாவுக்கு அக்கா முறை.
ஆகவே அப்பா அவரை எதிர்த்து எதுவும் பேசமாட்டார் என்பதெல்லாம் அந்த வயதில் தெரியவில்லை. அப்பா என்னை முறைத்து பார்த்துக்கொண்டே போய்விட்டார். அமிச்சி என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே முதுகை தட்டிக்கொடுத்த அந்த நிகழ்வு அப்படியே மனதில் தங்கிவிட்டது. அரசு பரிசு பெற்ற அடிமைப்பெண் படத்தை ரசித்துப்பார்த்தேன். ”தாயில்லாமல் நானில்லை!”- இந்த பாட்டை இன்றும் ரசித்துப்பார்க்கிறேன்.
அப்படத்தின் மாண்பு, சிறப்புக்களை பின்பு அப்பாவிடம் நான் விவரித்த போது ‘நான் வேண்டாம் என்று சொல்லியும் போய்விட்டு வந்தவன்தானே?,- என்று அப்பா கோபப்பட்டதும், அந்த குற்ற உணர்ச்சிகளுடன் பல நாட்கள் அவரை நான் பார்க்க தயங்கிய நினைவுகள் பசுமரத்து ஆணி போல இன்றும் என் மனதிற்குள் உலா வருகின்றன.

இரவு நேரங்களில் உறங்குவதற்குமுன் தினமும் ஒரு கதை சொல்லும் என் அமிச்சி!
சொத்து சேர்த்து அதை அனுபவிக்காமல் பரிதாபமாக செத்த ஒரு கஞ்சன் கதையை அடிக்கடி கேட்டு ரசிப்பேன்.
யாருக்கும் உதவாத அந்த கஞ்சன் மேல் இன்றும் கோபம் வரும்.
தேங்காய் திருட அந்த கஞ்சன் மரமேறி இறங்கத்தெரியாமல் திணறுகிறான்.
காப்பாற்ற வந்தவன், நான் உன்னை காப்பாற்றினால் எவ்வளவு தருவாய்? எனத்திரும்ப திரும்ப கேட்டு அந்த கஞ்சனை கடுப்பேத்துகிறான்.
மரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்த அந்த கஞ்சன், இரண்டு கைகளையும் விரித்து நான் இவ்வளவு தருவேன் என்று சொல்ல கீழே விழுந்து செத்து விடுகிறான். இந்த கதைதான் பயங்கர சிரிப்பை தரும் எனக்கு.
மரத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ளாமல், இரண்டு கைகளையும் விரித்து, என்னை காப்பாற்றினால், இவ்வளவு தருவேன்! என்று அந்த கஞ்சன் சொன்னதை அமிச்சி, தன் கைகளை விரித்துக்காட்டி அபிநயத்தோடு சொல்லும்போது நான் விழுந்து விழுந்து சிரிப்பேன்.

மகன் வயிற்று பேத்திகளில் ஒன்றை காட்டி, நீ பெரிதான பின்னர், இவளைத்தான் கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஏன் சொன்னார் என்று இன்றும் புரியவில்லை.

அமிச்சி தவறிய போது என்னால் செல்ல முடியவில்லை.
அந்த இழப்பை என் மனம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அந்த இறுதிக்கிரியைகளை என் நினைவுகளில் ஏற்றிக்கொள்ள விருப்பமில்லை.
அவர் காற்றோடு கலந்து விட்டதாக எண்ணிக்கொள்கிறேன்.

நல்ல மூப்படைந்த வயதிலும் ஒரு பல்லும் விழாத அந்த முத்து பல்லழகி அமிச்சி என் இதயத்தில் அழுத்தமாக, ஆழமாக பதிந்துவிட்டார்!

அந்த கிராமத்திற்கு செல்லும்போதெல்லாம் அமிச்சியின் நினைவுகள் உயிர்த்தெழுந்து ஓடிவந்து என் கரங்களைப்பற்றிக்கொள்கின்றன!

அன்புடன் திருநாவு
டிசம்பர், 2014






No comments: